தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி: காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தினேஷ்குண்டுராவ் கருத்து கேட்பு
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தினேஷ்குண்டுராவ் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட பெரும்பாலான நிர்வாகிகள், கவுரவமான எண்ணிக்கையில் தொகுதியை பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 20 முதல் 22 தொகுதிகள் தான் வழங்க முடியும் என்று தி.மு.க. தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக தி.மு.க-காங்கிரஸ் இடையே நடைபெற்ற 2 கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. தி.மு.க., ஆரம்பத்தில் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால், தி.மு.க. அளிக்கும் தொகுதிகளை பெற்றுக்கொண்டு தேர்தலை சந்திக்கலாமா? அல்லது வேறு முடிவுகளை எடுக்கலாமா? என்பது குறித்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார்.
நிர்வாகிகள் கருத்து
மாநில செயல் தலைவர் விஷ்ணு பிரசாத், துணைத்தலைவர் விஜய் வசந்த், பொதுச்செயலாளர்கள் பி.வி.தமிழ்செல்வன், தளபதி பாஸ்கர், மாநில செயலாளர் அகரம் கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.
நிர்வாகிகளில் பெரும்பாலானோர், ‘தி.மு.க. கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதியை கேட்டு பெற வேண்டும். ராகுல்காந்தி வருகைக்கு பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்து வரும் செல்வாக்கு உயர்ந்து உள்ளது. கவுரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்கும் வரை பின்வாங்கக்கூடாது' என்று வலியுறுத்தினர்.
நிர்வாகிகளில் சிலர், ‘கவுரமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காதபட்சத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற தயங்கக்கூடாது. தனித்து போட்டியிட்டு நமது பலத்தை காண்பிக்கலாம். காங்கிரஸ் தொண்டர்கள் எதற்கும் தயாராக உள்ளனர்' என்று கூறி உள்ளனர்.
நல்ல முடிவு ஏற்படும்
இன்னும் சிலர், ‘தற்போது உள்ள சூழ்நிலையில் தனித்து போட்டியிடுவது என்பது சரியாக இருக்காது. தொடர்ந்து பல தேர்தல்களை தி.மு.க. கூட்டணியில் இருந்து சந்தித்து உள்ளோம். தொடர்ந்து தி.மு.க.விடம் பேசி சாதகமான முடிவை எடுப்பது தான் சரியாக இருக்கும். வேறு கூட்டணி என்பது மக்கள் மத்தியில் எடுபடாது' என்று தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.
முடிவில் தினேஷ்குண்டுராவ் நிருபர்களிடம் கூறும்போது, ‘தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. விரைவில் நல்ல முடிவு ஏற்படும்' என்றார்.
மாநிலம் முழுவதும் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்ததால் சத்தியமூர்த்தி பவன் பரபரப்பாக இருந்தது.
வேலுடன் விருப்ப மனு
காங்கிரஸ் சார்பில் போட்டியிட நேற்று ஏராளமானோர் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. அருள் அன்பரசு, சிறிய வேல் ஒன்றுடன் விருப்ப மனுவை அளித்தார். வேல் பிரசாரத்தை பா.ஜ.க.வினர் தங்கள் கையில் எடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் வேலுடன் விருப்ப மனு அளிக்க வந்ததை காங்கிரஸ் தொண்டர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதுகுறித்து அருள் அன்பரசு நிருபர்களிடம் கூறும்போது, ‘முருகப்பெருமான் குடியிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்ததால் முருகப்பெருமானின் ஆயுதமான வேலுடன் விருப்ப மனு அளித்தேன்' என்றார்.
Related Tags :
Next Story