தொகுதி கண்ணோட்டம்: எடப்பாடி


தொகுதி கண்ணோட்டம்: எடப்பாடி
x
தினத்தந்தி 5 March 2021 5:46 AM GMT (Updated: 5 March 2021 5:46 AM GMT)

தமிழகத்தின் மிக முக்கியமான தொகுதியாக எடப்பாடி உள்ளது.

தற்போது முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதி என்பதால் தமிழகத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது வி.ஐ.பி. அந்தஸ்தை எடப்பாடி தொகுதி பெற்றுள்ளது.

எடப்பாடி நகராட்சி மற்றும் கொங்கணாபுரம், பூலாம்பட்டி, நங்கவள்ளி, வனவாசி, ஜலகண்டாபுரம் ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி, மேச்சேரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 28 ஊராட்சிகளை உள்ளடக்கியது இந்த தொகுதி.

எடப்பாடி தொகுதியானது 1952-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையில் இதுவரை 13 தேர்தல்களை சந்தித்துள்ளது. அவற்றில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தலா 2 முறையும், பா.ம.க. 3 முறையும், அ.தி.மு.க. 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, 1952, 1984-ல் காங்கிரஸ், 1967, 1971-ல் தி.மு.க., 1996, 2001, 2006-ல் பா.ம.க., 1977, 1980, 1989, 1991, 2011, 2016-ல் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

இதில் 1989-ல் நடந்த தேர்தலில் ஜெ.அணி சார்பில் சேவல் சின்னத்தில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரை எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளார்.

எடப்பாடி தொகுதியில் 1996-ல் பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஐ.கணேசன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வுக்கு 2-ம் இடமும், அ.தி.மு.க. வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 3-வது இடமும் கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி இந்த தொகுதியில் ஒரு முறை தோல்வி அடைந்துள்ளார்.

2016-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. சார்பில் முருகேசனும் போட்டியிட்டார்கள். அந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி 98 ஆயிரத்து 703 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் அண்ணாதுரை 56 ஆயிரத்து 681 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் முருகேசன் 55 ஆயிரத்து 149 வாக்குகளும் பெற்றனர்.

தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியே அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் முதல்-அமைச்சராக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து வந்தாலும், அடிக்கடி எடப்பாடி தொகுதிக்கு வந்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றி கொடுப்பதில் அக்கறையுடன் செயல்பட்டார். தொகுதிக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது.

எடப்பாடி தொகுதியை பொறுத்தவரையில் விசைத்தறி மற்றும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. வன்னியர் அதிகளவில் வசித்து வந்தாலும், அதற்கு அடுத்தபடியாக கொங்கு வேளாளர், பருவத ராஜகுல சமுதாயம், நாடார், வேட்டுவ கவுண்டர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களும் அதிகளவில் வசிக்கும் தொகுதியாக உள்ளது. மேலும், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் பரவலாக வசிக்கிறார்கள்.

எடப்பாடி தொகுதியில் சாலை மற்றும் குடிநீர் வசதி, புதிதாக அரசு கலைக்கல்லூரி, கல்வியியல் கல்லூரி, வனவாசியில் பாலிடெக்னிக் கல்லூரி, சிட்கோ தொழிற்பேட்டை, புறவழிச்சாலை, கூட்டுக்குடிநீர் திட்டம், சரபங்கா நதியை தூர்வாருதல், நகராட்சி புதிய கட்டிடம், நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும், திட்டங்களையும் அ.தி.மு.க. அரசு செய்து கொடுத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் எதுவும் அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. விசைத்தறி கூடங்கள் அதிகமாக உள்ளதால் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது விசைத்தறியாளர்களின் கோரிக்கையாகும். பூலாம்பட்டி-அம்மாபேட்டை காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும். 

பூலாம்பட்டியை சுற்றுலா தலமாக்குவது, நங்கவள்ளியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை, பட்டு சேலை அதிகளவில் நெசவு செய்யப்படுவதால் அத்தொழிலை மேம்படுத்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பதும் எடப்பாடி தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2016-ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 137 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் புதிய வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்து வந்தவர்கள் என 23 ஆயிரத்து 241 பேர் அதிகரித்துள்ளனர். எனவே, இவர்களது வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் - 2,84,378

ஆண்கள் - 1,44,757

பெண்கள் - 1,39,597

மூன்றாம் பாலினம் - 24

2016 தேர்தல் வாக்கு விவரம்:
மொத்த வாக்குகள் - 2,61,137

பதிவான வாக்குகள் - 2,23,981

எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.) - 98,703

அண்ணாதுரை (பா.ம.க.) - 56,681

முருகேசன் (தி.மு.க.) - 55,149

Next Story