தொகுதி கண்ணோட்டம்- சேலம் மேற்கு


தொகுதி கண்ணோட்டம்- சேலம் மேற்கு
x
தினத்தந்தி 5 March 2021 6:19 AM GMT (Updated: 5 March 2021 6:19 AM GMT)

சேலம் இரும்பாலை, சேலம் ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகம், ஜங்ஷன் ரெயில் நிலையம், சேகோசர்வ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன தலைமை அலுவலகம் என முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள தொகுதியாக சேலம் மேற்கு திகழ்கிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தொகுதி மறு சீரமைப்புக்கு பின் 2011-ல் சட்டசபை தேர்தலில் சேலம் மேற்கு தொகுதி உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு வீரபாண்டி மற்றும் தாரமங்கலம் தொகுதியில் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாக்களித்தனர்.

சேலம் இரும்பாலை, சேலம் ரெயில்வே கோட்ட தலைமை அலுவலகம், ஜங்ஷன் ரெயில் நிலையம், சேகோசர்வ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன தலைமை அலுவலகம் என முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள தொகுதியாக சேலம் மேற்கு திகழ்கிறது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 5-வது வார்டு வரையும், 17 முதல் 25-வது வார்டு வரையிலும், சேலம், ஓமலூர், தாரமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 30 ஊராட்சிகளையும் உள்ளடக்கியது இந்த தொகுதி. இங்கு வெள்ளிப்பட்டறை, கயிறு திரிக்கும் தொழில் மற்றும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

இந்த தொகுதியில் வன்னியர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக ஆதி திராவிடர் மற்றும் அருந்ததியர், கொங்கு வேளாளர் கவுண்டர்கள், போயர், நாடார் என பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். இதுதவிர, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் பரவலாக வசிக்கிறார்கள்.

சேலம் மேற்கு தொகுதி உருவாகி 2011-ல் நடந்த முதல் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜி.வெங்கடாஜலம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் வக்கீல் ராஜேந்திரன் களம் இறங்கினார். அந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.வெங்கடாஜலம் 95 ஆயிரத்து 935 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016-ல் நடந்த தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் அவரே மீண்டும் போட்டியிட்டு 80 ஆயிரத்து 755 வாக்குகள் பெற்று 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேலம் மேற்கு தொகுதியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள் ஓரளவுக்கு செய்து கொடுத்திருந்தாலும் பல இடங்களில் பொதுமக்களின் தேவைகள் அதிகளவில் உள்ளது. சேலம் ஏ.வி.ஆர்.ரவுண்டானா முதல் 5 ரோடு சாரதா கல்லூரி சாலை வரையிலும் உயர்மட்ட மேம்பாலம், அதேபோல் குரங்குச்சாவடியில் இருந்து 5 ரோடு, புதிய பஸ் நிலையம், 4 ரோடு வரையிலும் பிரமாண்ட ஈரடுக்கு மேம்பாலம் கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோல், சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 4 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வருகின்றன. அய்யம்பெருமாம்பட்டி ஊராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம், போடிநாயக்கன்பட்டி ரெயில்வே தரைப்பாலம் விஸ்தரிப்பு, 4 ஊராட்சிகளில் அம்மா மினி கிளினிக் மற்றும் சாலை வசதி, ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அ.தி.மு.க. அரசு செய்து கொடுத்துள்ளதாக மேற்கு தொகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா 10 ஆண்டுகளை கடந்தும் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரவில்லை. சேலத்தாம்பட்டி ஏரியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியதாலும், அங்கு துணை மின் நிலையம் அமைத்ததாலும் மழை பெய்யும் சமயத்தில் ஏரி நிரம்பி சிவதாபுரம், பனங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

வெள்ளிப்பட்டறை தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் தொழில் பாதுகாப்பு, தனி நலவாரியம் அமைத்தல், வெள்ளி கொலுசுக்கு காப்புரிமை, தொழில் பூங்கா அமைப்பது, அரசின் வளர்ச்சி திட்டங்கள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது வெள்ளி தொழிலாளர்களின் கோரிக்கையாகும்.

பல்வேறு இடங்களில் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதே சேலம் மேற்கு தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2016-ம் ஆண்டு சேலம் மேற்கு தொகுதியில் 2 லட்சத்து 71 ஆயிரத்து 115 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் புதிய வாக்காளர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் என 26 ஆயிரத்து 870 பேர் அதிகரித்துள்ளனர். இவர்களது வாக்குகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

2016 தேர்தல் வாக்கு விவரம்:

மொத்த வாக்குகள்--------------------------2,71,115

பதிவான வாக்குகள்------------------------2,01,269

ஜி.வெங்கடாஜலம் (அ.தி.மு.க.) --80,755

பன்னீர்செல்வம் (தி.மு.க.) -------------73,508

ரா.அருள் (பா.ம.க.) ----------------------29,982

அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க.) ---8,962


பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள்-----2,97,985

ஆண்கள்-----------------------------------1,48,477

பெண்கள்---------------------------------1,49,452

மூன்றாம் பாலினம்-------------56


Next Story