தொகுதி கண்ணோட்டம்: சிவகங்கை


தொகுதி கண்ணோட்டம்: சிவகங்கை
x
தினத்தந்தி 5 March 2021 12:18 PM IST (Updated: 5 March 2021 12:18 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை சீமை அரசியல் சிறப்பும், ஆன்மிக சிறப்பும், வரலாற்று சிறப்பும் நிறைந்தது.

அதே போன்றுதான் சிவகங்கை சட்டமன்ற தொகுதியும்.1952 முதல் இதுவரை 15 எம்.எல்.ஏ.க்கள் இந்த தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.5 முறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும், ஒருமுறை சுயேச்சையாக சிவகங்கை மன்னரும், 4 முறை தி.மு.க.வும், 2 முறை இந்திய கம்யூனிஸ்டு கட்சியும், 3 முறை அ.தி.மு.க.வும் இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளன. இந்த தொகுதியின் 16-வது சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய பொதுத்தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந்ேததி நடக்கிறது.

இனி சிவகங்கை தொகுதியை ‘ரவுண்ட் அப்’ செய்து, ஓர்கண்ணோட்டமாக காணலாம், வாருங்கள்...

முதல் எம்.எல்.ஏ.
சிவகங்கை சட்டமன்ற தொகுதியின் முதல் எம்.எல்.ஏ.வாக 1952-ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி.சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டார்.1957-ல் சிவகங்கை மன்னர் சுப்பிரமணியராஜா சுயேச்சையாக தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 1962-ல் நடந்த தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆர்.வி.சுவாமிநாதன் வெற்றி பெற்றார்.1967 மற்றும் 1971-ல் தி.மு.க.வை சேர்ந்த சேதுராமனும், 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உ.சுப்பிரமணியனும் 1989-ல் தி.மு.க.வை சேர்ந்த பா.மனோகரனும் 1991-ல் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.ஆர்.முருகானந்தமும்,. 1996-ல் தி.மு.க.வை சேர்ந்த பசும்பொன் தா.கிருட்டிணனும், .2001-ல் அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரனும், 2006 மற்றும் 2011-ல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த குணசேகரனும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக மக்கள் பணியாற்றினர்.கடந்த 2016-ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த பாஸ்கரன் தேர்வு செய்யபட்டார்.சிவகங்கை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தி.மு.க.வை சேர்ந்த தா.கிருட்டிணனும், அ.தி.மு.க.வை சேர்ந்த பாஸ்கரனும் தமிழக அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.

வாக்குவிவரம்
2016-ம் ஆண்டு தேர்தலில் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் விவரம் வருமாறு:-

பாஸ்கரன் (அ.தி.மு.க.) 81,697

சத்தியநாதன் என்ற மேப்பல் சக்தி (தி.மு.க.) 75,061

குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்டு) 15,114

ஸ்ரீதர்வாண்டையார் (அ.இ.பா.பி) 5,214

தொகுதியில் உள்ள இடங்கள்
தொகுதி சீரமைப்புக்கு பின்பு சிவகங்கை தாலுகா, காளையார்கோவில் தாலுகா மற்றும் நாட்டரசன்கோட்டை பேரூராட்சியுடன் காரைக்குடி தாலுகாவை சேர்ந்த கீரணிபட்டி, வரிவயல், கூத்தலூர் சேது ரெகுநாதபட்டிணம், பிலார், தேவபட்டு, கல்லல், செம்பனூர், அரண்மனை சிறுவயல், குருந்தம்பட்டு, சன்னவனம், வேப்பங்குளம், விளாவாடியேந்தல், ஆலாம்பட்டு, மாலைகண்டான், மற்றும் வெற்றியூர் ஆகிய பகுதிகள் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் அடங்கியுள்ளன.

சிவகங்கை சட்டமன்ற தொகுதி விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பகுதி. இங்குள்ள பலர் வறட்சி காரணமாக வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிகின்றனர். மேலும் இங்கு தொடங்கப்பட்ட பல நூற்பாலைகள் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டு விட்டன.இதனால் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது..

நீண்ட கால கனவு
சிவகங்கை அருகே தொடங்கப்பட்ட ‘ஸ்பைசஸ்பார்க்’ முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. இது போல் இந்த பகுதி மக்களின் நீண்ட கால கனவாக இருப்பது கிராபைட் தொழிற்சாலையாகும்.சிவகங்கை பகுதிகளில் கிடைக்கும் கிராபைட் தாது உலகிலேயே மிக சிறந்த வகையை சேர்ந்தது. தற்போது இதை வெட்டி எடுத்து சுத்திகரிக்கும் பணி மட்டும் நடைபெறுகிறது. ஆனால் இதை பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடங்கப்படவில்லை. அவ்வாறு தொழிற்சாலைகள் அமைந்தால் இந்த பகுதி இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும்.ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் இதை செயல்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் பிரசாரத்திற்காக மட்டும் இதை பயன்படுத்துவார்கள். பதவி ஏற்றவுடன் பல காரணங்களை கூறி கிராபைட் தொழிற்சாலை தொடங்குவதை கைவிட்டு விடுகின்றனர் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.இது போல் அரசனூர் பகுதியில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட சிப்காட் வளாகமும் வெறும் அறிவிப்புடன் நின்றுவிட்டது. குடிநீர் பிரச்சினையை பொறுத்தவரை காவிரி கூட்டு குடிநீர்திட்டம் இங்கு செயல்பட்டாலும் நகராட்சியின் சார்பில் சிவகங்கை பகுதியில் ஒருநாள்விட்டு ஒருநாள் வழங்கும் குடிநீரை தடையில்லாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதும் இங்குள்ள வாக்காளர்கள் விரும்புகிறார்கள்.

காவிரி, வைகை, குண்டாறு திட்டம்
அதோடு மாவட்ட தலைநகரான சிவகங்கையில் இருந்து நெடுந்தூரங்களுக்கு பஸ்கள் இயக்க வேண்டும் என்பதும் இந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும். மேலும் தற்போது காவிரி, வைகை, குண்டாறு திட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டாலும் அது முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்துடன் நின்று விடுகிறது. எனவே அந்த திட்டத்தை சிவகங்கை மாவட்டம் வரை விரைவில் விரிவுப்படுத்த வேண்டும் என்பதும் விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.தற்போது இங்கு அரசு மருத்துவ கல்லூரி செயல்பட்டாலும் அத்துடன் அரசு செவிலியர் கல்லூரி, அரசு என்ஜினீயரிங் கல்லூரி, மற்றும் ஐ.ஐ.டி, ஆகியவை தொடங்கப்பட வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

சிவகங்கை தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதத்தில் புதிய தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். இதற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி வாக்காளர்களின் கோரிக்கையாக உள்ளது.

பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் ... 2,99,118

ஆண்கள் ........................ 1,47,093

பெண்கள் ..........................1,52,021

மூன்றாம் பாலினத்தவர் .............. 4

Next Story