எடப்பாடி தொகுதியில் முதல்-அமைச்சர் பழனிசாமி மீண்டும் போட்டி; அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெறுகிறது.
சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.
ஆலோசனை
தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் ஒரேகட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட இந்த நேர்காணல் அரசியல் களத்தில் அனைத்து கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தது. இதையொட்டி, வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதற்கிடையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ் மகன் உசேன், செய்தி தொடர்பாளர் பா.வளர்மதி, மருத்துவரணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் உள்ளிட்டோர் அடங்கிய ஆட்சி மன்றக்குழு நிர்வாகிகள் முன்னிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்
இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே, 6 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய அ.தி.மு.க.வின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமானஓ.பன்னீர்செல்வம் கையெழுத்துடன் இந்த பட்டியல் வெளியானது.அதன்படி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். ராயபுரம் தொகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும், விழுப்புரம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர்
சி.வி.சண்முகம் போட்டியிடுவார் என்றும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. போட்டியிடுவார் என்றும், நிலக்கோட்டை (தனி) தொகுதியில் எஸ்.தேன்மொழிஎம்.எல்.ஏ. போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
அ.தி.மு.க. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதும் கட்சி அலுவலகத்தை சூழ்ந்திருந்த அ.தி.மு.க. வினர் கொண்டாட்டம் அடைந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர். ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க... புரட்சித்தலைவி ஜெயலலிதா வாழ்க...' என்று தொடர்ந்து வாழ்த்து கோஷங்கள் எழுப்பியபடியே இருந்தனர்.இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வெளியே வந்தனர். அப்போது திரண்டிருந்த தொண்டர்கள் ‘எடப்பாடியார் வாழ்க... ஓ.பி.எஸ். வாழ்க...', ‘வெற்றி நமதே...' போன்ற வாழ்த்து கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். பொன்னாடைகள் வழங்கியும், மலர்களை தூவியும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து வெற்றியை குறிப்பிடும் விதமாக இரட்டை விரல்களை காண்பித்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் சிரித்தமுகமாக காட்சி தந்தனர். இதனைப்பார்த்து தொண்டர்களும் உற்சாகம் அடைந்தனர்.
அரசியல் பந்தயத்தில் அ.தி.மு.க.
இதையடுத்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலக வளாகத்தில் இருந்த எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா சிலைகளை வணங்கினார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டார். அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு தொகுதி பங்கீடு (23 இடங்கள்) உறுதி செய்யப்பட்ட நிலையில், இதர கட்சிகளான பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா.வுடன் இன்னும் இழுபறியே நீடித்து வருகிறது. தொகுதி பங்கீடு நிறைவடையாத நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் நேரிடலாம் என்று கருதப்பட்டது. எந்த
கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காத நிலையில் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் பந்தயத்தில் அ.தி.மு.க. முதல் கட்சியாக தைரியமாக கோதாவில் குதித்திருக்கிறது. இது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story