தொகுதி பங்கீடு விஷயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ‘கிடுக்கிபிடி’ போட்ட அ.தி.மு.க., தி.மு.க


தொகுதி பங்கீடு விஷயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ‘கிடுக்கிபிடி’ போட்ட அ.தி.மு.க., தி.மு.க
x
தினத்தந்தி 6 March 2021 12:14 AM GMT (Updated: 6 March 2021 12:14 AM GMT)

தொகுதி பங்கீடு விஷயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க., தி.மு.க. கிடுக்கிபிடி போட்டுள்ளது.

கலகலப்பில் கட்சி அலுவலகங்கள்

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழக சட்டசபை தேர்தல் களம் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது. ஆளுமைமிக்க தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல் களமாக இருந்தாலும், அதையும் தாண்டி புதிய ஆளுமைக்கான தேடுதலுக்கான தேர்தல் என்பதால் கூடுதல் சிறப்பை தமிழகம் பெற்று இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் திருவிழா கோலம் பூண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு அரசியல் கட்சி அலுவலகத்திலும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். விருப்பமனு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் நேர்காணல், ஆலோசனை என தினமும் ஏதாவது நிகழ்ச்சிகளை நடத்தி தங்களது இருப்பை அரசியல் கட்சிகள் காட்டி வருகிறது. இதனால் கல்யாண வீடு போல கட்சி அலுவலகங்கள் கலகலப்பாக காட்சியளிக்கிறது.

அலங்கரிக்காத கட்சிகள்

தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்த போதிலும், பலமான எதிர்க்கட்சியாக அதிக எண்ணிக்கையுடன் தி.மு.க. உறுப்பினர்கள் இடம் பெற்றனர். அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர காங்கிரஸ் (8), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) வெற்றி பெற்று சட்டசபையில் அலங்கரித்தனர்.

மற்ற கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., பா.ம.க, பா.ஜ.க., நாம் தமிழர் என எந்த கட்சியும் வெற்றி வாய்ப்பை ருசிக்க முடியவில்லை, சட்டசபைக்குள் நுழையவும் முடியவில்லை.

கூட்டணி கணக்கு

எனவே இந்த முறை சட்டசபைக்குள் நுழைந்து விட வேண்டும் என்று பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சி பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளன. அதற்கேற்றவாறு கூட்டணி கணக்குகளையும் அவர்கள் அமைத்து வருகின்றன.

தங்களின் பலத்தை மற்ற கட்சிகளுக்கு தாரை வார்க்க இந்த முறை பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. விரும்பவில்லை என்பதைத்தான் அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் நடத்தும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை காட்டுகிறது. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாக களம் காண்பதால் வாக்குகள் சிதறி விடக்கூடாது என்பதற்காகவும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் குறைந்தது 180 தொகுதிகளில் களம் காண திட்டமிட்டு இருக்கிறது.

கறாராக...

இதற்காகவே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு விவகாரத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் சற்று கறாராக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த காலங்களில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்ட பா.ம.க.வுக்கு 23 இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுக்கும் குறைந்த தொகுதிகளை ஒதுக்கவே தொடர்ந்து பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கவே விரும்புகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை நூல் இழையில் தவற விட்டதற்கு கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கியதே காரணம் என்று மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி வருகிறது.

அரசியல் ஆட்டம் ஆரம்பம்

அ.தி.மு.க., தி.மு.க. என 2 அணிகளிலும் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த இடங்களை ஒதுக்கப்பட்ட போதிலும் இந்த முறை வெற்றியை ருசிக்க வேண்டும் என்பதால் கூட்டணி கட்சிகள் தங்களுக்குள் சமாதானமாகி கிடைத்த இடங்களை பெற்றுக்கொண்டு போட்டியிட தயாராகி விட்டன. சந்தர்ப்ப சூழ்நிலை, சாதக, பாதகங்களை அடிப்படையாக கொண்டே தொகுதி பங்கீடு அமைந்து வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

தமிழக அரசியல் சதுரங்கத்தில் ஆட்டம் தொடங்கி விட்டது.

 


Next Story