தொகுதி கண்ணோட்டம்: சேலம் தெற்கு
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் சேலம் தெற்கு தொகுதி மிகமுக்கியமானது. ஏனென்றால் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 37-வது வார்டு முதல் 60-வது வார்டு வரை மொத்தம் 23 வார்டுகள் அனைத்தையும் உள்ளடக்கியது.
1951-ல் சேலம் நகரம் என அழைக்கப்பட்ட சட்டசபை தொகுதியானது 1957-ல் இருந்து சேலம்-1 என்று தொகுதி மாற்றி அமைக்கப்பட்டது. தொடர்ந்து 2008-ம் ஆண்டு மீண்டும் தேர்தல் ஆணையத்தால் மறு சீரமைப்பு செய்த போது சேலம்-1 தொகுதி நீக்கப்பட்டு சேலம் தெற்கு தொகுதியாக மாறியது. இந்த தொகுதியில் 60 சதவீதம் நெசவு மற்றும் கைத்தறி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. கைத்தறி, நெசவு, ஜவுளி ஏற்றுமதி, சாயப்பட்டறை தொழில், வெள்ளி மற்றும் தங்க ஆபரண தொழிலில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் வெண்பட்டு வேட்டிகள் அதிகளவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக சேலம் வெண்பட்டு வேட்டிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது பெருமைக்குரியதாகும்.சேலம் தெற்கு தொகுதியை பொறுத்தவரையில் கன்னட தேவாங்கர் செட்டியார் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக முதலியார், சோழிய வேளாளர், ஆதிதிராவிடர்கள், வன்னியர், நாடார் என பல்வேறு சமூகத்தை
சேர்ந்தவர்களும் பரவலாக வசித்து வருகிறார்கள். மேலும், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களும் அதிகளவில் உள்ளனர்.
சேலம்-1 என தொகுதி இருந்தபோது, காங்கிரஸ்-4 முறையும், அ.தி.மு.க.-5 முறையும், தி.மு.க.-4 முறையும் வெற்றி பெற்றிருந்தது. அதன்பிறகு 2008-ல் தொகுதி மறுசீரமைப்புக்கு பின் சேலம் தெற்கு தொகுதியில் 2011 மற்றும் 2016-ல் நடந்த 2 சட்டசபை தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வெற்றி வாகை சூடியுள்ளது. சேலம் தெற்கு தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என்று அக்கட்சியினர் பெருமிதத்துடன் கூறி வருகிறார்கள்.சேலம் தெற்கு தொகுதி உருவாகி 2011-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எம்.கே.செல்வராஜூ போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க.சார்பில் எஸ்.ஆர்.சிவலிங்கம் களம் இறங்கினார். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.கே.செல்வராஜூ 1 லட்சத்து 12 ஆயிரத்து 691 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட ஏ.பி.சக்திவேல், 1 லட்சத்து ஆயிரத்து 696 வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வேட்பாளர் குணசேகரன், 71 ஆயிரத்து 243 வாக்குகள் பெற்றார்.
சேலம் தெற்கு தொகுதியில் ஜவுளி தொழில் பிரதானமாக இருந்தாலும் அதனை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதாவது, ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. அவ்வாறு ஜவுளி பூங்கா அமையும் பட்சத்தில் ஜவுளிக்கு தேவையான மூலப்பொருட்கள் உள்ளூரில் வாங்குவதோடு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பதே விசைத்தறியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. அரசு இதுவரை முழுமையாக செயல்படுத்தாமல் சாலையில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு அந்த பணிகள் மெத்தனமாக நடந்து வருவதாக தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.பச்சப்பட்டியில் உள்ள ராஜகால்வாய் ஆக்கிரமிப்பு, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு மேலாக மெதுவாக நடக்கும் திருப்பணிகள், சேலம்-சீலநாயக்கன்பட்டி இடையே நிலவும் போக்குவரத்து நெரிசல், சரியாக திட்டமிடாமல் கட்டப்பட்ட சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம், அம்மாபேட்டையில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு நூற்பாலை, சாயப்பட்டறை கழிவுநீர் திருமணிமுத்தாற்றில் கலப்பது, கடைவீதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய் மற்றும் குடிநீர் பிரச்சினை அதிகளவில் உள்ளது.சேலம் பழைய பஸ் நிலையத்தை இடித்துவிட்டு ஈரடுக்கு பஸ் நிலையம் அமைக்கும் பணிகளும் மெதுவாகவே நடந்து வருகிறது. ஆழ்துளை கிணறு அமைத்தல், சுகாதார வளாகம், ரேஷன் கடை திறப்பு, தார்சாலை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகள் சில இடங்களில் மட்டுமே செய்து தரப்பட்டுள்ளது.
2016-ம் ஆண்டு சேலம் தெற்கு தொகுதியில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 172 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் 5 ஆண்டுகளில் இறப்பு மற்றும் வெளியூர் சென்றவர்களால் 3 ஆயிரத்து 943 வாக்காளர்கள் தற்போது குறைந்துவிட்டனர். அதேசமயம், ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளதால் இவர்களின் வாக்குகளும், புதிய வாக்காளர்களின் வாக்குகளும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இருப்பினும், சேலம் தெற்கு தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் -2,59,229
ஆண்கள் -1,26,698
பெண்கள் -1,32,508
மூன்றாம் பாலினம் -23
2016 தேர்தல் வாக்கு விவரம்:
மொத்த வாக்குகள் -2,63,172
பதிவான வாக்குகள் -1,96,052
சக்திவேல் (அ.தி.மு.க.) -1,01,696
குணசேகரன் (தி.மு.க.) -71,243
குமார் (பா.ம.க.) -6,325
Related Tags :
Next Story