அதிமுக அடுத்த வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்;தொகுதி மாறும் அமைச்சர்கள்


அதிமுக அடுத்த வேட்பாளர்  பட்டியல் விரைவில் வெளியிடப்படும்;தொகுதி மாறும் அமைச்சர்கள்
x
தினத்தந்தி 6 March 2021 9:34 AM GMT (Updated: 2021-03-06T15:04:51+05:30)

அதிமுக வேட்பாளர் அடுத்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. சில அமைச்சர்கள் தொகுதி மாற உள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை

சென்னை

அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், சில அமைச்சர்கள் தொகுதி மாற உள்ளதாகவும், அமைச்சர் பதவியை இழந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு மட்டுமே 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதி பங்கீடு இன்னும் பேச்சுவார்த்தை அளவிலேயே உள்ளது. அதிமுக தனது இரட்டை இலை சின்னத்தில் 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்துள்ள நிலையில், மீதமுள்ள 64 இடங்களையே மற்ற கட்சிகளுக்கு பிரித்தளிக்கும். இதுதவிர மற்றவர்களை தங்கள் சின்னத்தில் போட்டியிட வைக்க அதிமுக எண்ணுகிறது.

இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் தற்போதுள்ள அமைச்சர்களில் சிலர் தொகுதி மாறி போட்டியிட முடிவெடுத்து, அது தொடர்பாக தலைமையிடம் பேசி வருகின்றனர்.

குறிப்பாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் தொகுதியில் இருந்து சாத்தூர் அல்லது அருகில் உள்ள வேறு தொகுதிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளத்துக்கும் மாற உள்ளதாக பேசப்படுகிறது. இதுதவிர, பெண் அமைச்சர்கள் சரோஜா, நிலோபர் கபீல், ராஜலட்சுமி ஆகியோரது தொகுதியிலும் மாற்றம் இருக்கலாம் என கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் அடிப்படையில் தற்போதுள்ள எம்எல்ஏக்கள் சிலருக்கும் வேறு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் எம்எல்ஏ எம்.மணிகண்டன் உட்பட, பதவியிழந்த சில முன்னாள் அமைச்சர்களுக்கும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிற தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக அதிமுக தலைமையகத்தில் அந்தந்த மாவட்டச் செயலாளர்களுடன் தனித்தனியாக இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வளர்மதி, தமிழ்மகன் உசேன், வேணுகோபால் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஆலோசனைக்குப் பின் மீதமுள்ள தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Next Story