‘பெண்களின் ஆசியுடன் நாட்டை ஆள ஆசைப்படுகிறேன்’; கமல்ஹாசன் பேச்சு


‘பெண்களின் ஆசியுடன் நாட்டை ஆள ஆசைப்படுகிறேன்’; கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 7 March 2021 12:10 AM GMT (Updated: 2021-03-07T05:40:42+05:30)

பெண்களின் ஆசியுடன் நாட்டை ஆள ஆசைப்படுகிறேன் என்று சென்னை தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.

வாக்கு சேகரிப்பு

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு பிந்தைய பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 3-ந்தேதி முதல் மேற்கொண்டு வருகிறார். சென்னை ஆலந்தூரில் தொடங்கிய அவர் மவுலிவாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், மடிப்பாக்கம், திருவொற்றியூர், கொளத்தூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்கு சேகரித்தார்.

நேர்மை

அந்தவகையில் நேற்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கமல்ஹாசன் ‘டார்ச்’ சின்னத்துக்கு நேற்று வாக்கு சேகரித்தார். தியாகராயநகர் தாமஸ் சாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் முன்னிலையில் திறந்த காரில் நின்றவாறு கமல்ஹாசன் பேசியதாவது:-

மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் மாறாமல் அப்படியே தான் உள்ளது. அதனால், மக்கள் இந்த முறையாவது சிந்தித்து பார்க்கவேண்டும். உங்களுடைய வாழ்க்கையை குத்தகைக்கு விடாதீர்கள். இந்த முறை நல்லவர்கள், நேர்மையானவர்கள் கையில் நம்பி கொடுங்கள். தமிழகத்தில் நேர்மை இன்னும் இருக்கிறது என்பதற்கான அடையாளம் தான் இங்கு கூடியிருப்பவர்கள்.

பெண்களின் ஆசியுடன்...

மக்கள் தங்களுடைய நேர்மையை வாக்களிக்கும் போது காட்ட வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சி பெண்களை நம்பி தான் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் வீட்டை ஆட்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள். பெண்களின் ஆசியுடன் நாட்டை ஆள ஆசைப்படுகிறேன்.

அதனால் தான் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று தைரியமாக அறிவித்தோம். எங்களை பார்த்து பிற கட்சிகளும் இந்த திட்டத்தை அறிவிக்க ஆரம்பித்துவிட்டனர். இதை ஆராய்ந்து கைதட்டினால் மட்டும் போதாது. உங்கள் விரல்களை நீட்டி அதில் கருப்பு புள்ளி வைத்துகொள்ளுங்கள். ஆனால் கருப்பு கறை தமிழகத்தில் படியாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

வாழ்க்கை தரம் மாறும்

தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் அவர்களுடைய தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்தார்கள். மக்கள் தங்களுடைய அடுத்த தலைமுறையை பற்றி யோசிக்கவேண்டிய நேரம் இது. எனவே, மக்கள் அவர்களுடைய அடுத்த தலைமுறைக்காக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இனி வரும் அரசியல் சரியாக இருந்தால் மக்களின் வாழ்க்கை தரம் மாறும். இது சத்தியம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story