விஜயகாந்த் முன்னிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது; முதற்கட்டமாக 14 மாவட்டங்களுக்கு நடந்தது


விஜயகாந்த் முன்னிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது; முதற்கட்டமாக 14 மாவட்டங்களுக்கு நடந்தது
x
தினத்தந்தி 7 March 2021 1:29 AM GMT (Updated: 7 March 2021 1:29 AM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வேட்பாளர் விருப்பமனு வினியோகம் செய்யப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வேட்பாளர் விருப்பமனு வினியோகம் செய்யப்பட்டது. வேட்பாளர் விருப்ப மனு வினியோகம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் விருப்ப மனு செய்துள்ளனர்.

இந்தநிலையில் தே.மு.தி.க. வேட்பாளர் நேர்காணல் நிகழ்ச்சி, அக்கட்சி அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கியது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் இந்த நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். காலை முதற்கட்டமாக கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களுக்கும், மறுகட்டமாக மதியம் கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தஞ்சை, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும், நாளை (திங்கட்கிழமை) மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை மாவட்டங்களுக்கும் வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.

 


Next Story