திருச்சியில் இன்று தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம்; 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்


திருச்சியில் இன்று தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம்; 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்
x
தினத்தந்தி 7 March 2021 7:59 AM IST (Updated: 7 March 2021 7:59 AM IST)
t-max-icont-min-icon

விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சியில் தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதில் 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் 11-வது மாநில மாநாடு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் என்ற இடத்தில் மார்ச் 14-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக 700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, தொண்டர்கள் அமருவதற்கும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டு முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கிடையே தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

இதனை தொடர்ந்து தி.மு.க. மாநில மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். அதன் பின்னர் மாநாடு நடைபெறுவதாக இருந்த இடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட அளவில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. “விடியலுக்கான முழக்கம்” என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பெரிய மேடை ஒன்றும், சிறிய அளவிலான 2 மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மேடையில் மு.க.ஸ்டாலின் இருப்பார் என்றும், மற்ற மேடைகளில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் கொடியேற்றுகிறார்

பொதுக்ககூட்ட திடலில் தி.மு.க. கொடி ஏற்றுவதற்காக 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் அருகில் 300 அடி நீள அகன்ற எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. கூட்ட அரங்கின் நுழைவு வாயிலில் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் வரை ஏராளமான கொடிக்கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

இன்று காலை 11 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 100 அடி உயர தி.மு.க.கொடியேற்றி வைத்து, பொதுக்கூட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து தி.மு.க. பிரசார காணொளிகள், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் காணொளிகள் ஒளிபரப்பபடுகிறது. பிற்பகல் 2.50 மணிக்கு தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு வரவேற்புரையாற்றுகிறார். மாலை 3 மணி முதல் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி ஆகிய துறைகளின் தற்போதைய நிலையை விளக்கி தி.மு.க. முன்னணியினர், வல்லுனர்கள் பேசுகிறார்கள்.

10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம்

மாலை 4 மணிக்கு தமிழ் பண்பாடு மற்றும் பெருமையை பறைசாற்றும் கலைநிகழ்ச்சி நடக்கிறது. 4.15 மணிக்கு சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூகநீதி ஆகிய துறைகளின் தற்போதைய நிலையை தி.மு.க. முன்னணியினர் மற்றும் வல்லுநர்கள் பேசுகிறார்கள். 5.15 மணிக்கு தமிழ்ப்பண்பாடு மற்றும் பெருமையை பறை சாற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்ட அரங்கிற்கு வந்து மக்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

மாலை 6 மணிக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகிறார். அதன்பிறகு மாலை 6.30 மணிக்கு தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டத்தை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். முன்னதாக பல்வேறு தலைப்புகளில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பேசுகிறார்கள். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சியில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்கூட்ட நுழைவு வாயில் அருகே ஏராளமான ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று காலை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்க தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.


Next Story