தொகுதி கண்ணோட்டம்: ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் உதயமான பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
தொழிற்பேட்டை
ராணிப்பேட்டை தொகுதியில் சிப்காட் என்ற முக்கிய தொழிற்பேட்டை உள்ளது. மேலும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையின் துணைத் தொழிலகங்களான ஆன்சிலரி தொழிற்சாலைகள் பரவலாக அமைந்துள்ளது.மேலும் பல்வேறு கெமிக்கல் தொழிற்சாலைகள், பீங்கான் உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள், உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ராணிப்பேட்டை தொகுதியில் அமைந்துள்ளது. அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் தோல் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் பிரதானமாக இயங்கி வருகிறது. ராணிப்பேட்டை மற்றும் மேல்விஷாரம் பகுதிகளில் பீடி தொழிற்சாலைகளும், வாலாஜா பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலைகளும் உள்ளன.
இந்தியாவிலேயே 2-வதாக போடப்பட்ட வாலாஜா ரோடு ரெயில் நிலையம், தமிழகத்தின் முதல் நகரசபையான வாலாஜா நகரசபை, ராணிப்பேட்டையில் பழமை வாய்ந்த ஸ்கடர் மருத்துவமனை, ரத்தினகிரி பாலமுருகன் கோவில், லாலாபேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி கோவில், வாலாஜா அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளன. வாலாஜா வில் மஞ்சள் காமாலைக்கு பச்சிலை மருந்து தரும் வைத்தியசாலை இந்த தொகுதியில் அமைந்துள்ளது.
மருந்து ஆராய்ச்சி நிலையம்
ராணிப்பேட்டை பெயர் வரக்காரணமான ராஜா தேசிங்கு, ராணி நினைவு சின்னமும், புகழ்பெற்ற பாலாற்றின் கரையருகே உள்ளது. ஆசிய அளவில் புகழ்பெற்ற கால்நடைகளுக் கான மருந்துகள் தயாரிக்கும் ஐ.வி.பி.எம் மருந்து ஆராய்ச்சி நிலையம், 9 லட்சம் மரங்கள் இருந்ததாக கூறப்படும் நவ்லாக் விவசாய பண்ணையும் இந்த தொகுதியில் அமைந்துள்ளது.
விவசாயிகள் பெரும் பகுதி வசித்துவந்த தொகுதி என்ற நிலை இப்போது மாறிவிட்டது. சிப்காட் தொழிற் பேட்டை வந்ததும் விவசாய தொழிலில் நஷ்டம் வந்ததால், பெரும்பாலானவர்கள் விவசாயத்தை கைவிட்டு, சிப்காட்டில் உள்ள தொழிற்சாலை களில் வேலைக்கு சேர்ந்தனர். இப்போது பொருளாதார சூழ்நிலை காரணமாக சிப்காட்டில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. இங்கு வேலை செய்து வந்த தொழிலாளர் கள் மீண்டும் விவசாயத்திற்கு திரும்பலாம் என்றால் நிலத்தடி நீர் மாசு அடைந்ததால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு நிலங்கள் மாறிவிட்டது.
வாலாஜா வில் முன்பு தறி நெசவு தொழில் மற்றும் பிரம்புத் தொழில் இருந்து வந்தது. இப்போது அதுவும் குறைந்து விட்டது. ஆற்காடு ஒன்றியத்தில் சில பகுதிகளிலும், வாலாஜா ஒன்றியத் தில் சில பகுதி களில் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
283 வாக்குச்சாவடி மையங்கள்
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை, வாலாஜா, மேல்விஷாரம் ஆகிய 3 நகராட்சிகளும், வாலாஜா ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளும், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளும், அம்மூர் பேரூராட்சியும் அடங்கியுள்ளது.வன்னியர் சமூகத்தினர் 33 சதவீதமும், ஆதிதிராவிடர் சமூகத்தினர் 30 சதவீதமும், முஸ்லிம்கள் 13 சதவீதமும், இதர சமூகத்தினர் 24 சதவீதமும் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் கொண்ட தொகுதியாக ராணிப்பேட்டை தொகுதி உள்ளது. இவர்கள் வாக்களிக்க 283 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
துரைமுருகன்
1991-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற வேணுகோபால் மரணம் அடைந்ததால் 1993-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் கோவி.எஸ்.மோகனன், தி.மு.க. சார்பில் ஆற்காடு வீராசாமி போட்டியிட்டனர். இதில் மோகனன் வெற்றி பெற்றார்.இந்த தொகுதியில் 1952-ல் இருந்து காங்கிரஸ் 3 முறையும், தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தல் ஒன்றிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன் ராணிப்பேட்டை தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க.வை சேர்ந்த ஆர்.காந்தி 3
முறை வெற்றி பெற்றுள்ளார். அதுபோல சுயேச்சையாக போட்டியிட்ட கே.ஏ.வகாப், வாலாஜா அசேன் ஆகிய 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முகம்மதுஜானும், தி.மு.க. சார்பில் காந்தியும் போட்டியிட்டனர். இதில் முகம்மதுஜான் வெற்றி பெற்றார். முகம்மதுஜான் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் சுமார் 2 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் ஆர்.காந்தியும், அ.தி.மு.க. சார்பில் சுமைதாங்கி ஏழுமலையும்
போட்டியிட்டனர். இதில் காந்தி வெற்றி பெற்றார்.
பொதுமக்களின் எதிர்பார்ப்புகள்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் எந்த வசதியும் இதுவரை செய்யப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் மாசடைந்து உள்ளதால் அனைத்து பகுதிகளுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். சிப்காட்டில் மூடப்பட்டுள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். நவ்லாக் பண்ணையில் வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும். வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனைத்துவித நவீன உபகரணங்கள் கொண்டு வர வேண்டும்.
ராணிப்பேட்டையில் கலெக்டர் அலுவலகம் வேகமாக கட்டி முடித்து, அனைத்துத்துறை அரசு நிறுவனங்களும் அமைக்க வேண்டும். நகராட்சி கடைகளின் வாடகை கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள சுமார் 400 கடைகளில் பாதி கடைகள் சரண்டர் செய்யப்பட்டுள்ளது. சிப்காட்டில் உள்ள குரோமேட் கம்பெனியில், குரோமேட் கழிவுகள் மலை போல் குவிந்துள்ளது. இதனால் மழை பெய்யும் போது இக்கழிவுகள் மழைநீரில் கலந்து வெளியேறுவதால் இப்பகுதியில் உள்ள ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. உடனடியாக
இக்கழிவுகளை அகற்ற வேண்டும். சென்னையிலிருந்து வேலூர் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் ராணிப்பேட்டை நகரின் உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் வேலூரிலிருந்து சென்னை செல்லும் அனைத்துப் பஸ்களும் ராணிப்பேட்டை நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணிப்பேட்டை நகரில் பெரிய பஸ் நிலையம் கட்டப்பட்டு, அங்கிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி செய்து தரப்பட வேண்டும்.மேற்கண்டவை உள்ளிட்ட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் - 2,65,626
ஆண்கள் - 1,28,391
பெண்கள் - 1,37,219
மூன்றாம் பாலினத்தவர்கள் - 16
Related Tags :
Next Story