முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ் சந்திப்பு


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ் சந்திப்பு
x
தினத்தந்தி 7 March 2021 3:58 PM GMT (Updated: 7 March 2021 3:58 PM GMT)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியை, தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ் சந்தித்தார்.

சென்னை, 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் ஓரணியிலும், திமுக, விசிக, மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொமதேக ஆகிய கட்சிகள் இன்னொரு அணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றன.

இத்தகைய சூழலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பாஜக தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. முன்னதாக பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 

இதனிடையே தேமுதிகவுக்கு அதிகபட்சம் 15 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக தயாராக இருப்பதாகவும், ஒருவேளை அதிலும் இழுபறி நீடித்தால் இறுதியாக, 18லிருந்து 20 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்ற கணக்கில் உடன்பாடு எட்டப்படலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது. 
 
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ் நேரில் சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எத்தனை தொகுதி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதிமுக - தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story