பா.ஜ.க.வை 20 இடங்களிலும் தோற்கடிக்க வேண்டும் ப.சிதம்பரம் பேச்சு


பா.ஜ.க.வை 20 இடங்களிலும் தோற்கடிக்க வேண்டும் ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 7 March 2021 10:04 PM GMT (Updated: 7 March 2021 10:04 PM GMT)

பா.ஜ.க.வை 20 இடங்களிலும் தோற்கடிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நாம் குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். புது யுக்தியுடன் களப்பணி ஆற்ற வேண்டும். புதிய பூத் கமிட்டி உறுப்பினர்களாக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 25 பேர் வீதம் பெண்கள், படித்தவர்கள், துடிப்பான இளைஞர்களை சேர்க்க வேண்டும்.

வெற்றியை தீர்மானித்தே..

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி குறைவாக வழங்கப்பட்டு இருப்பது நமது குற்றமே. கூட்டணியாளர்கள் கடந்த கால வெற்றியை தீர்மானித்தே தொகுதி வழங்குகிறார்கள். தற்போதைய நோக்கமெல்லாம் நச்சுத்தன்மை கொண்ட பா.ஜ.க.வை தமிழகத்தில் கால் ஊன்ற விட மாட்டோம். தொன்மை வாய்ந்த நமது மொழி, மரபு, கலாசாரம் சிதைக்கப்பட்டு விடும்.

ஒரே நாடு ஒரே மொழி என இந்தி ஆதிக்கம் மேலோங்கி விடும். காங்கிரஸ் கடந்த 1885-ம் ஆண்டில் சுதந்திர கொள்கையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி. பா.ஜ.க. மத ரீதியாக மக்களை பிளவுப்படுத்த தூண்டியவர்கள். ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தவர்கள்.

தோற்கடிக்க வேண்டும்

சமீபத்தில் தமிழகம் வந்த அமித்ஷாவுக்கு வானதி சீனிவாசன், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் இரண்டை பரிசளித்தார். 2 பொம்மைகளும் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் போல் தோன்றுகிறது. அ.தி.மு.க. கொள்கை கோட்பாடுகளை பா.ஜ.க.விடம் அடகு வைத்து விட்டது. 4 ஆண்டுகள் உறக்கத்தில் இருந்த முதல்-அமைச்சர் பழனிசாமி 3 மாதங்களாக மக்களைச் சந்தித்து பட்ஜெட் முடிந்த பிறகு சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி என்று ஏமாற்று வேலை செய்கிறார்.

வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு சில இடங்களில் ஜெயித்தாலும் பா.ஜ.க.வை 20 இடங்களிலும் நாம் தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story