தொகுதி கண்ணோட்டம்: வீரபாண்டி


தொகுதி கண்ணோட்டம்: வீரபாண்டி
x
தினத்தந்தி 8 March 2021 4:52 AM GMT (Updated: 8 March 2021 4:52 AM GMT)

சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் இதுவரை நடந்த 14 தேர்தலில் அ.தி.மு.க. 7 முறையும், தி.மு.க. 6 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

வீரபாண்டி தொகுதி தமிழகத்தின் 91-வது தொகுதியாகும். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வீரபாண்டி தொகுதியில் 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மனோன்மணி 94 ஆயிரத்து 792 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வீரபாண்டி ராஜா 80 ஆயிரத்து 311 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த தொகுதியில் சேலம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள், வீரபாண்டி ஒன்றியத்தில் 25 ஊராட்சிகள், பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, மல்லூர், பனமரத்துப்பட்டி ஆகிய 4 பேரூராட்சிகள் அடங்கியுள்ளன. வீரபாண்டி தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக வன்னியர் சமுதாயம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கொங்கு வேளாளர் கவுண்டர், முதலியார், நாடார், செட்டியார், போயர், அருந்ததியர் என பரவலாக அனைத்து சமுதாய மக்களும் வசித்து வருகிறார்கள்.

ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை பகுதிகளில் விசைத்தறி தொழிலும், தொகுதி முழுவதும் விவசாயம் பிரதான தொழிலாகவும் உள்ளது. தொகுதியில் அரியானூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரூ.42 கோடியில் புதிதாக உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், ஜருகுமலையில் ரூ.9 கோடியில் சாலை வசதி, சீரகாபாடி பகுதியில் அரசு சட்டக்கல்லூரி, வீரபாண்டி ஒன்றியத்தில் கல்பாரப்பட்டி ஊராட்சியில் ரூ.652 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டமும், வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகள், பள்ளிக்கூடத்திற்கு தேவையான வகுப்பறைகள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ளன.

இளம்பிள்ளை பகுதியில் நெய்யப்படும் காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலைகளுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நல்ல மவுசு இருப்பதால் அங்கு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. பனமரத்துப்பட்டி ஏரியை தூர்வாரி சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கையாகும். 2 ஆயிரத்து 400 ஏக்கரில் இந்த ஏரி அமைந்துள்ளது. ஆனால் போதமலை, ஜருகுமலையில் மழை பெய்தால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் பனமரத்துப்பட்டி ஏரிக்கு வரும். ஆனால் நீர்வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளதால் ஏரிக்கு தண்ணீர் வருவது சிரமமாக உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, பனமரத்துப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுத்தால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும்.

அதேபோல், பனமரத்துப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பூக்கள் அதிகளவில் விளைச்சல் இருப்பதால் அங்கு பூக்களை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீரபாண்டி தொகுதியில் நடந்து முடிந்த 14 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க.வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் எம்.எல்.ஏ.க்களாக பதவி வகித்துள்ளனர். மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 4 முறையும், அ.தி.மு.க.வை சேர்ந்த விஜயலட்சுமி பழனிசாமி 2 முறையும், அவரது சகோதரி மனோன்மணி ஒரு முறையும், வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி குப்புசாமியின் மகன் எஸ்.கே.செல்வம் 2 முறையும், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா மற்றும் அவரது உறவினர் வெங்கடாசலம் ஆகியோர் தலா ஒரு முறையும் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக இருந்துள்ளனர். இதுதவிர, அ.தி.மு.க.வை சேர்ந்த வேங்கா கவுண்டர், அர்ச்சுணன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தியாகி கந்தசாமி ஆகியோரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ம் ஆண்டு வீரபாண்டி தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 101 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது கடந்த 5 ஆண்டுகளில் புதியவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்கள் என 20 ஆயிரத்து 340 வாக்காளர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இவர்களது வாக்குகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

2016 தேர்தல் வாக்கு விவரம்:
மொத்த வாக்குகள் -2,39,101

பதிவான வாக்குகள் -2,05,932

எஸ்.மனோன்மணி (அ.தி.மு.க.) -94,792

வீரபாண்டி ராஜா (தி.மு.க.) -80,311

ஏ.ஆர்.பி.சாம்ராஜ் (பா.ம.க.) -17,218

பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் -2,59,441

ஆண்கள் -1,30,312

பெண்கள் -1,29,111

மூன்றாம் பாலினம் -17

Next Story