தொகுதி கண்ணோட்டம்: நாகை
நாகை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு 6 சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்புக்குப்பின்னர் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிதாக கீழ்வேளூர் தொகுதி உருவாக்கப்பட்டது. தற்போது மயிலாடுதுறை மாவட்டமாக பிரிக்கப்பட்டதையடுத்து, நாகை மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகளும், மயிலாடுதுறை மாவட்டத்தில்3 சட்டசபை தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.
அதன்படி நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொகுதியில் நாகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகள், நாகை ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சிகளில் 13 ஊராட்சிகள் நாகை தொகுதியில் உள்ளன. மீதமுள்ள 16 தொகுதிகள் தொகுதி சீரமைப்புக்குப்பின்னர் கீழ்வேளூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. மேலும் நன்னிலம் தொகுதியில் இருந்த 38 ஊராட்சிகள் நாகை தொகுதியுடன் இணைக்கப்பட்டது. தற்போது சட்டசபை தொகுதிகளின் வரிசையில் நாகை தொகுதி 163-வது இடத்தை பிடித்துள்ளது.
நாகை தொகுதி 1952 முதல் 2016 வரை நாகை தொகுதி இதுவரை 15 முறை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், தி.மு.க., தேசிய லீக் கட்சிகள், மனிதநேய ஜனநாயக கட்சி தலா 1 முறையும் வெற்றி பெற்று உள்ளன. கடந்த 2016-ல் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. அதாவது 1967, 1977, 1980, 1984, 1989, 2006-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, 1991, 2001, 2011-ல் அ.தி.மு.க., 1957, 1962-ல் காங்கிரஸ், 1971-ல் தி.மு.க., 1996-ல் தேசிய லீக், 1952-ல் இந்திய கம்யூனிஸ்டு, 2016-ல் மனிதநேய ஜனநாயக கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
நாகை தொகுதியில் 2016-ம் ஆண்டு போட்டியிட்ட மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த தமிமுன்அன்சாரி 64 ஆயிரத்து 903 வாக்குகள் பெற்று பெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போடடியிட்ட மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த ஜவாகிருல்லா 44 ஆயிரத்து 353 வாக்குகள் பெற்றார். இந்த தொகுதி 1952-ல் தோற்றுவிக்கப்பட்ட போது இது இரட்டைத்தொகுதியாக இருந்தது. அதன்பின்னர் 1957 தேர்தலில் பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது.
இந்த தொகுதியில் துறைமுகம் உள்ளது. நாகை தொகுதியில் தற்போது அரசு தொழிற்பயிற்சி நிலையம், தொழில்நுட்ப கல்லூரிகள், மருந்தாளுநர் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மீன்வள பல்கலைக்கழகம், அரசு பள்ளிகள் உள்ளிட்டவைகள் உள்ளன. மேலும் நாகை நகரம் அருகே பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட்., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், நரிமணத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இதனால் பெரும்பாலான மக்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்த தொகுதியில் மீனவர்கள், வெள்ளாளர்கள், கள்ளர்கள், சிறுபான்மையினர் என அனைத்து தரப்பினரும் வசித்து வருகிறார்கள். நாகை தொகுதி விவசாயம், மீன்பிடி தொழில் நிறைந்த தொகுதியாகும்.நாகை தொகுதியை பொறுத்தவரையில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிக்கு கட்டிடம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம், மீன்வள பல்கலைக்கழகத்திற்கு கட்டிடம், தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பணகுடியில் மத்திய அரசு நிதி உதவியுடன் ரூ.31,500 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஆலை விரிவாக்க பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது நாகை நம்பியார் நகரில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.34 கோடியில் சிறுமீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாகையில் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. நாகூர் பட்டினச்சேரியின் கடற்கரையையொட்டி தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள தெரிவிக்கின்றனர்.
நாகை- அக்கரைப்பேட்டை செல்லும் சாலையில் தோணித்துறை ரெயில்வே மேம்பால பணிகளுக்கு நிலம் கையப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்து பணிகளை முடிக்க வேண்டும். நாகையில் அனைத்து பருவ நிலைகளிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் பசுமை சூழல் கப்பல் அணையும் துறைமுகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாகையில் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும். உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலவர் கோவில் மற்றும் சுற்றுலா தலங்கள் நாகையை சுற்றி உள்ளதால் நாகையை தலைமையிடமாக கொண்டு நகர் பகுதியில் சுற்றுலா துறை அலுவலகம் அமைக்க வேண்டும். வெட்டாற்றின் குறுக்கே கடல்நீர் உட்புகாதவாறு தேவைப்படும் இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.
விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால் வைக்கோலை பயன்படுத்தி காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பதும் நாகை தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.2016-ம் ஆண்டு நாகை தொகுதியில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 48 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் புதிய வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்து வந்தவர்கள் என 14 ஆயிரத்து 268 பேர்
அதிகரித்துள்ளனர். எனவே இவர்களது வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்
நாகை சட்டசபை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு:-
1952 இந்திய கம்யூனிஸ்டு வெற்றி:-
சிவராஜ் (இ.கம்யூ.) 39,027
வடிவேலு (இ.கம்யூ.) 36,846
சண்முகசுந்தரம்பிள்ளை (காங்.) 32,226
1957 காங்கிரஸ் வெற்றி:-
ராமலிங்கம் (காங்.) 24,552
ஜீவானந்தம் (இ.கம்யூ.) 13,847.
1962 காங்கிரஸ் வெற்றி:-
பாலகங்காதரன் (காங்.) 27,447
பக்தவச்சலம் (இ.கம்யூ.) 20,355.
1967 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி:-
ஞானசம்பந்தன் (மா.கம்யூ.) 36,569
ஆர்.ஆர்.வி.நாயுடு (காங்.) 26,462.
1971 தி.மு.க. வெற்றி:-
ராசமாணிக்கம் (தி.மு.க.) 29,744.
ராமநாததேவர் (பழைய காங்.) 23,342
1977 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி:-
உமாநாத் (மா.கம்யூ.) 44,105
ராமநாததேவர் (இ.காங்.) 41,738
1984 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி:-
வீரையன் (மா.கம்யூ.) 43,684
தென்கோவன் (அ.தி.மு.க.) 38,698.
1989 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி:-
வீரையன் (மா.கம்யூ.) 44,681.
பொன்.பழனிவேலு (இ.காங்.) 30,884.
1991 அ.தி.மு.க. வெற்றி:-
கோடிமாரி (அ.தி.மு.க.) 53,050
வீரையன் (மா.கம்யூ.) 43,116
1996 தேசிய லீக் வெற்றி:-
நிஜாமுதீன் (தேசிய லீக்) 46,553.
ஜீவானந்தம் (அ.தி.மு.க.) 26,805.
2001 அ.தி.மு.க. வெற்றி:-
ஜீவானந்தம் (அ.தி.மு.க.) 59,808
தங்கையா (தி.மு.க.) 43,091
2006 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி:-
மாரிமுத்து (மா.கம்யூ.) 57,315
ஜெயபால் (அ.தி.மு.க.) 54,971.
2011 அ.தி.மு.க. வெற்றி
ஜெயபால் (அ.தி.மு.க.) 61,870
முகமதுஷேக்தாவூத் (முஸ்லிம் லீக்) 56,127
2016- மனிதநேய ஜனநாயக கட்சி வெற்றி
தமிமுன்அன்சாரி (ம.ஜ.க.) -64,903
ஜவாகிருல்லா (ம.நே.க.) - 44,353
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் -1,97,316
ஆண்கள் -95,558
பெண்கள் -1,01,748
மூன்றாம் பாலினம் -10
Related Tags :
Next Story