தொகுதி கண்ணோட்டம்: போளூர்


தொகுதி கண்ணோட்டம்: போளூர்
x
தினத்தந்தி 8 March 2021 5:55 AM GMT (Updated: 8 March 2021 5:55 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது.

விவசாயம்
போளூர் தொகுதியில் போளூர் ஒன்றியத்தில் உள்ள 94 கிராமங்களும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 76 கிராமங்களும், பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள 48 கிராமங்களும் என 218 கிராமங்கள் உள்ளன. இந்த தொகுதியை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர பிரிவினர் 45 சதவீதமும் உள்ளனர்.இங்கு விவசாயம், நெசவு தொழில் அதிகளவில் உள்ளன. போளூர் பகுதியில் மாம்பட்டு, எழுவாம்பாடி, வில்வாரணி, ஒண்ணுபுரம், அல்லியாளமங்களம் போன்ற கிராமங்களில் நெசவு தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கும் வேட்டி, சேலை, லுங்கிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங் களுக்கு அனுப்பப்படுகின்றன.மேலும் போளூர் பகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் இங்குள்ள இளைஞர்கள் வேலைக்காக சென்னை மற்றும் பெங்களூரு வுக்கு கூலி வேலைக்கு அதிகளவில் சென்றுள்ளனர்.

7 முறை தி.மு.க. வெற்றி
இந்த தொகுதியில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த 15 தேர்தல்களில் தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், காமன்வெல்த் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.கடந்த 1952-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காமன் வெல்த் கட்சி சார்பில் போட்டியிட்ட மாணிக்கவேலுநாயக்கர் வெற்றி பெற்றார். இவர் 1964-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை மேலவை தலைவராகவும் இருந்தார். 1957-ம் ஆண்டு எஸ்.எம். அண்ணாமலை தி.மு.க. சார்பிலும், டி.பி.கேசவரெட்டியார் சுயேச்சையாகவும் போட்டியிட்ட தில் அண்ணாமலை வெற்றி பெற்றார். 1962-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் டி.பி.கேசவ ரெட்டியாரும், காங்கிரஸ் சார்பில் பெரியசாமி கவுண்டரும் போட்டி யிட்டனர். இதில் டி.பி.கேசவ ரெட்டியார் வெற்றி பெற்றார்.

நன்றி தெரிவித்த வேட்பாளர்கள்
1957-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற எஸ்.எம்.அண்ணாமலை காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். இவர் தி.மு.க. வேட்பாளர் 
எஸ்.குப்பம்மாளிடம் தோல்வியை தழுவினார்.1971-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் தொ.ப.சீனிவாசனும், காங்கிரஸ் சார்பில் நடேசகவுண்டரும் போட்டியிட்டதில் சீனிவாசன் வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் அறிவித்தவுடன் வெற்றி பெற்ற சீனிவாசனும் வெற்றி வாய்ப்பை இழந்த டி.ஆர்.நடேசகவுண்டரும் இணைந்து திறந்த ஜீப்பில் போளூர் நகரில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்வு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.1957, 1962, 1967, 1971 -ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து 4 முறை தி.மு.க. வெற்றி பெற்றது.

1977-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கே.ஜெ.சுப்பிரமணியன் அ.தி.மு.க. சார்பிலும், எஸ்.முருகையன் தி.மு.க. சார்பிலும் போட்டியிட்டனர். இதில் கே.ஜே.சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். 1980-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் எல்.பலராமனும், அ.தி.மு.க. சார்பில் ஏ.செல்வனும் போட்டியிட்டனர். இதில் பலராமன் வெற்றி பெற்றார். இதேபோல் 1984-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் ஜெ.ராஜாபாபுவும், டி.கே.சுப்பிரமணியன் அ.தி.மு.க. சார்பிலும் போட்டியிட்டதில் ராஜாபாபு வெற்றி பெற்றார்.1989-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா அணியை சேர்ந்த எஸ்.கண்ணனை தோற்கடித்து வெற்றி பெற்றார்.1991-ம் ஆண்டு தா.வேடியப்பன் அ.தி.மு.க. சார்பிலும், ஏ.ராஜேந்திரன் தி.மு.க. சார்பிலும் போட்டியிட்டதில் தா.வேடியப்பன் வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் ஏ.ராஜேந்திரனும், அ.தி.மு.க. சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் போட்டியிட்டனர். இதில் ஏ.ராஜேந்திரன் வெற்றி பெற்றார்.2001-ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த நளினிமனோகரனும், 2006-ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த விஜயகுமாரும் வெற்றி பெற்றனர். 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெயசுதாவும், பா.ம.க.வை சேர்ந்த எதிரொலி மணியனும் போட்டியிட்டதில் ஜெயசுதா வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த கே.வி.சேகரன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை சேர்ந்த சி.எம்.முருகன் தோல்வி 
அடைந்தார்.

333 வாக்குச்சாவடி மையங்கள்
போளூர் தொகுதியில் கடந்த முறை 285 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 1000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டன. இதனால் தற்போது 48 வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு மொத்தம் 333 வாக்குச்சாவடி மையங்களாக உயர்ந்துள்ளது.போளூர் ஒன்றியத்தில் 7 வாக்குச்சாவடிகளும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 11 வாக்குச்சாவடிகளும் என 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நிறைவேற்றப்பட வேண்டிய பிரச்சினைகள்
போளூரை அடுத்த பாக்மார்பேட்டையில் தொழிற்பேட்டை அமைக்க அரசு முன் வந்தது. ஆனால் இன்று வரை அமைக்கவில்லை. போளூரில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அமைத்து தர வேண்டும். போளூர் பெரிய ஏரிக்கு செய்யாற்றில் இருந்து மஞ்சளாறு வழியாக மழைநீர் வந்து சேருகிறது. குடிநீர் பற்றாக்குறை தீர பெரிய ஏரிக்கு கூடுதல் நீர்வழித்தடம் அமைக்க வேண்டும். ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். போளூரை நகராட்சியாக அந்தஸ்து உயர்த்த வேண்டும். வசூர் கிராமத்தில் உள்ள விதை நெல் ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்த வேண்டும். மொடையூரில் கற்சிற்ப கலையை மேம்படுத்த சிற்பிகளுக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். திருமலையில் பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சமணர் (ஜெயின்) ஆலயம், ஆவணியாபுரம் வைணவ கோவில், போளூர் சுயம்பு சம்பத் கிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் போன்றவற்றை சுற்றுலாதல மாக மாற்றி வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும்.

போளூர் பஸ் நிலைத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். போளூரில் விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும். தொகுதியில் உள்ள சாலை வசதிகள் உள்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். விவசாய கல்லூரி அமைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., காமராஜர், அண்ணா, இந்திராகாந்தி ஆகிய தலைவர்கள் போளூரில் தங்கிய பயணியர் மாளிகை தொடர்ந்து பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மூடியே உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். போளூர் தாலுகாவில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும். பெண்ணையாறு செய்யாறு இணைப்பு திட்டம் கொண்டு வர வேண்டும். முடையூரில் சிற்ப கல்லூரி அமைக்க வேண்டும்.மேற்கண்டவை உள்பட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெற்றியும் தோல்வியும்

போளூர் சட்டசபை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு:-

1952 - காமன்வெல்த் கட்சி வெற்றி :-

மாணிக்கவேலு நாயக்கர் வெற்றி

1957 -தி.மு.க. வெற்றி :-

எஸ்.எம்.அண்ணாமலை (தி.மு.க.) -17,222

டி.பி.கேசவ ரெட்டியார் (சுயே.) - 10,616

1962 - தி.மு.க. வெற்றி :-

டி.பி.கேசவ ரெட்டியார் (தி.மு.க.) -29,283

பெரியசாமி கவுண்டர் (காங்.) 17,828

1967 - தி.மு.க. வெற்றி :-

எஸ்.குப்பம்மாள் (தி.மு.க.) - 33,292

எஸ்.எம்.அண்ணாமலை (காங்.) -20,224

1971- தி.மு.க. வெற்றி :-

தொ.ப.சீனிவாசன் (தி.மு.க.) -34,728

டி.ஆர்.நடேசகவுண்டர் (காங்.) - 25,232

1977 - அ.தி.மு.க. வெற்றி :-

கே.ஜெ.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.) -24,631

எஸ்.முருகையன் (தி.மு.க.) - 21,902

1980 - காங்கிரஸ் வெற்றி:-

எல்.பலராமன் (காங்.) - 35,456

ஏ.செல்வன் (அ.தி.மு.க.) - 33,303

1984 - காங்கிரஸ் வெற்றி:-

ஜெ.ராஜாபாபு (காங்.) - 52,437

டி.கே..சுப்பிரமணியன் (தி.மு.க.) - 30,319

1989 - தி.மு.க. வெற்றி:-

ஏ.ராஜேந்திரன் (தி.மு.க.) - 31,478

எஸ்.கண்ணன் (அ.தி.மு.க.-ஜெ.) -21,334

1991 - அ.தி.மு.க. வெற்றி :-

தா.வேடியப்பன் (அ.தி.மு.க.) - 60,262

ஏ.ராஜேந்திரன் (தி.மு.க.) - 21,637

1996 -தி.மு.க. வெற்றி :-

ஏ.ராஜேந்திரன் (தி.மு.க.) - 59,070

அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி(அ.தி.மு.க.)-34,917

2001 - அ.தி.மு.க. வெற்றி :-

நளினிமனோகரன் (அ.தி.மு.க.) - 59,678

சி.ஏழுமலை (தி.மு.க.) - 48,871

2006 - காங்கிரஸ் வெற்றி:-

பி.எஸ்.விஜயகுமார் (காங்.) - 58,595

தா.வேடியப்பன் (அ.தி.மு.க.) - 51,051

2011 - அ.தி.மு.க. வெற்றி :-

எல்.ஜெயசுதா (அ.தி.மு.க.) - 92,391

எதிரொலிமணியன் (பா.ம.க.) - 63,846

2016 - தி.மு.க. வெற்றி :-

கே.வி.சேகரன் (தி.மு.க.) - 66,588

சி.எம்.முருகன்

(அ.தி.மு.க.) - 58,315

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் - 2,42,915

ஆண்கள் - 1,19,269

பெண்கள் - 1,23,642

மூன்றாம் பாலினத்தவர்கள் - 4

Next Story