புதுச்சேரியில் தே.மு.தி.க. தனித்து போட்டி 5 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பு


புதுச்சேரியில் தே.மு.தி.க. தனித்து போட்டி 5 தொகுதிகளுக்கு முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 March 2021 4:35 AM IST (Updated: 12 March 2021 4:35 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட உள்ளது. இதற்காக 5 தொகுதியில் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

சென்னை, 

புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணி அமைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ்-தி.மு.க. கட்சியும், என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க.-அ.தி.மு.க. கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. இதில் என்.ஆர்.காங்கிரசுக்கு 16 இடங்களும், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுடனான தொகுதி பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க.வுக்கு உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அ.ம.மு.க.வுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

5 வேட்பாளர்கள்

சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் தே.மு.தி.க. ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 5-ந்தேதியே வேட்பாளர்கள் அனைவரும் நேர்காணல் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) முதற்கட்டமாக புதுச்சேரியின் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு, தே.மு.தி.க. தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு:-

தே.மு.தி.க. சார்பில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. புதுச்சேரியின் பாகூர் தொகுதிக்கு அக்கட்சியின் மாநில செயலாளர் வி.பி.பி.வேலுவும், காலாப்பட்டு தொகுதிக்கு கட்சியின் அப்பகுதி செயலாளர் எஸ்.ஹரிஹரன் (எ) ரமேஷ், உப்பளம் தொகுதிக்கு வி.சசிகுமாரும், நெடுங்காடு தொகுதிக்கு ஏ.ஞானசேகரும், திருநள்ளாறு தொகுதிக்கு கே.ஜிந்தா குருவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Next Story