திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட செலுத்திய ரூ.10 ஆயிரத்தை திருப்பி கேட்டு சுயேச்சை வேட்பாளர் தர்ணா போராட்டம்


திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட செலுத்திய ரூ.10 ஆயிரத்தை திருப்பி கேட்டு சுயேச்சை வேட்பாளர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 13 March 2021 12:00 AM GMT (Updated: 13 March 2021 12:00 AM GMT)

திருவொற்றியூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட செலுத்திய ரூ.10 ஆயிரம் முன்வைப்புத்தொகையை திரும்ப கேட்டு சுயேச்சை வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர் கே.பி.சங்கர், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் ேபாட்டியிட நேற்று முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சுயேச்்சை மனு தாக்கல்

முதல் நாளான நேற்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. ஐகோர்ட்டு வக்கீல் ஜாகீர்உசேன் (வயது 47) என்பவர் மட்டும் சுயேச்சையாக போட்டியிட தேர்தல் அதிகாரி தேவேந்திரனிடம் நேற்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக ஆன்லைன் மூலம் ரூ.10 ஆயிரத்தை தேர்தலுக்கான முன்வைப்பு தொகையாக செலுத்திவிட்டு அதற்கான ஆவணங்களை தனது வேட்பு மனுவுடன் இணைத்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுத்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட தேவேந்திரன், ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்ட வைப்பு தொகை அரசு கணக்கில் வரவில்லை. அதனால் ரொக்கமாக செலுத்தினால்தான் மனுவை ஏற்றுக்்கொள்வோம் என்று கூறியதாக தெரிகிறது.

திரும்ப கேட்டார்

இதையடுத்து ரொக்கமாக ரூ.10 ஆயிரம் செலுத்தி வேட்பு மனுவை தாக்கல் செய்து முடித்தார். சிறிது நேரத்தில் ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்ட வைப்பு தொகை ரூ.10 ஆயிரம் ஜாகிர் உசேன் வங்கி கணக்கிலிருந்து அரசு கணக்கிற்கு சென்றுவிட்டதாக அவரது செல்ேபானுக்கு குறுஞ்செய்தி வந்தது.

அதன்படி மீண்டும் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து, தனக்கு வந்த குறுஞ்செய்தியை காண்பித்து தான் ரொக்கமாக கட்டிய ரூ,10 ஆயிரம் முன்வைப்புத்தொகையை திருப்பி தருமாறு கேட்டார்.

அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடிந்துவிட்டதால் தாங்கள் ரொக்கமாக செலுத்திய வைப்பு தொகையை கருவூலத்திற்கு அனுப்பிவிட்டோம். நீங்கள் கருவூலத்தில் மனு செய்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

தர்ணா போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த ஜாகீர்உசேன், தன்னுடைய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வைப்புத் தொகை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதை தொடர்ந்து ஜாகீர் உசேன் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதேபோல் ஆவடி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளரான ஆவடி நந்தவனமேட்டூர் பகுதியை சேர்ந்த எ.சந்திரசேகர் என்பவர் மட்டும் நேற்று ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பரமேஸ்வரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Next Story