புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது திமுக தலைமை
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 12 திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. அங்குள்ள 30 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுடன் பங்கீடு செய்வது குறித்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இறுதியாக நேற்று முன்தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. திமுக தரப்பில் ஜகதரட்சகன் எம்.பி., புதுச்சேரி தரப்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, புதுச்சேரியில் திமுகவுக்கு 13 தொகுதிகளும், காங்கிரசுக்கு 15 தொகுதிகளும், கூட்டணி கட்சிகளுக்கு (இந்திய கம்யூனிஸ்ட், வி.சி.க.) 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 12 திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ளது. திமுக போட்டியிடும் 13 தொகுதிகளில், பாகூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் பிறகு அறிவிக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உருளையன்கோட்டை - எஸ்.கோபால், உப்பளம் - வி. அனிபால்கென்னடி, மங்கலம் - சண் குமரவேல், முதலியார்பேட்டை - எல்.சம்பத், வில்லியனுர் - ஆர். சிவா, நெல்லித்தோப்பு - வி.கார்த்திகேயன், ராஜ்பவன் - எஸ்பி சிவகுமார், மண்ணாடிபட்டு - ஏ. கிருஷ்ணன், காலாப்பட்டு - எஸ். முத்துவேல், திருப்புவனை(தனி) - ஏ. முகிலன், காரைக்கால் (தெற்கு) - நாஜிம், நிரவி திருப்பட்டினம் - நாகதியாகராஜன் ஆகியோர் 12 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
'2021-புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் பட்டியல்'#VoteForDMK#திமுக_வெற்றிவேட்பாளர்கள்pic.twitter.com/VBNdrpC1Cu
— DMK (@arivalayam) March 13, 2021
Related Tags :
Next Story