தமிழக ஆறுகளை காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும் - மு.க.ஸ்டாலின்
தமிழக ஆறுகளை காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கை வெளியீட்டின் போது மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், “திமுக வேட்பாளர்கள் பட்டியலை நேற்று நான் வெளியிட்டேன். திமுக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுவதில் பெருமையடைகிறேன். திமுக தேர்தல் அறிக்கையை தேர்தல் கதாநாயகன் எனச் சொல்வதுண்டு. ஆனால், வேட்பாளர் பட்டியலையே சிலர் கதாநாயகன் என்றுதான் சொல்கின்றனர். இன்று இரண்டாவது கதாநாயகனை வெளியிடுகிறேன்.
திமுக தோன்றியதிலிருந்து தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். 1952 தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. இருந்தாலும் அண்ணா அன்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதனை வாக்குறுதிகளாகத் தருவோருக்கு ஆதரவு என்று அறிவித்தார். இந்த அறிக்கைகள் தனிப்பட்ட கட்சியின் விருப்பமாக அல்லாமல், தமிழக மக்களின் விருப்பமாகவும் இருக்கிறது.
திமுக போட்டியிட்ட முதல் தேர்தலின்போது, நெடுஞ்செழியன் தலைமையிலான குழு, பயணம் செய்து பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதேபோல், டி.ஆர்.பாலு தலைமையில் இம்முறை குழு அமைக்கப்பட்டு, அக்குழு தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் அறிக்கையைத் தயாரித்தது. அக்குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி. அவர்கள் மாபெரும் வரலாற்றுக் கடமையைச் செய்திருக்கின்றனர். பல்வேறு தலைமுறைகள் தாண்டியும் இவை பேசப்படும். தமிழ்நாட்டின் நிகழ்காலம், எதிர்காலத்தை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகள், வாக்குறுதிகளாக இருக்கின்றன.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும். ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும். வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தனி நலத்துறை ஏற்படுத்தப்படும். வள்ளலார் பெயரில் தேசிய மையம் உருவாக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக டேப் வழங்கப்படும்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கொண்டுவரப்படும். ரூ.2000 கோடி மதிப்பீட்டில் 200 தடுப்பணைகள் கட்டப்படும். மகளிர் சுய உதவி குழுவினரின் கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும். 30 வயதுக்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் அரசு பணியாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள். கலைஞர் காப்பீடு திட்டமும், வருமுன் காப்போம் திட்டமும் மேம்படுத்தப்படும். பெண்களுக்கான ஓய்வூதியம் ரூ.1,500ஆக உயர்த்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.
கிராமப்புற பூசாரிகளின் ஊதியம், ஓய்வூதியம் அதிகரிக்கப்படும். மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும். கடலோர மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்படும்.
நகர்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை களைய சைபர் காவல் நிலையம் அமைக்கப்படும். ஆதி திராவிடர்கள், பழங்குடியினருக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும். மாற்று திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்படும். இயற்கை வேளாண்மைக்கு என தனி பிரிவு உருவாக்கப்படும். இலங்கை இன படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த அழுத்தம் கொடுப்போம். தமிழக ஆறுகளை காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம் உருவாக்கப்படும்” என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story