புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தில், மேலிட பொறுப்பாளர்களை முற்றுகையிட்ட நிர்வாகிகள்


புதுச்சேரியில் காங்கிரஸ் அலுவலகத்தில், மேலிட பொறுப்பாளர்களை முற்றுகையிட்ட நிர்வாகிகள்
x
தினத்தந்தி 14 March 2021 12:31 PM IST (Updated: 14 March 2021 12:31 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் திமுகவுக்கு 13 இடங்களை விட்டுக் கொடுத்ததற்கு எதிர்ப்பு காங்கிரஸ் அலுவலகத்தில், மேலிட பொறுப்பாளர்களை அக்கட்சி நிர்வாகிகள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரி, 

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு அடுத்த (ஏப்ரல்) மாதம் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. ஆனால் புதுவையில் முதல் நாளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

புதுவையை பொறுத்தவரை காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் காங்கிரசுக்கு 15 தொகுதிகளும், தி.மு.க.வுக்கு 13 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் பெயர் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார். பாகூர் தொகுதிக்கு வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் வேட்பாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி முன்னாள் முதல்வரான
நாராயணசாமியும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். 

அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் புதுச்சேரியில் திமுகவுக்கு 13 இடங்களை விட்டுக்கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவர்கள் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் புதுச்சேரி காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story