வித்தியாசமான வேடங்களில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்


வித்தியாசமான வேடங்களில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 15 March 2021 9:55 PM GMT (Updated: 2021-03-16T03:25:36+05:30)

சென்னையில் வித்தியாசமான வேடங்களில் வந்து வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சென்னை,


தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில வேட்பாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வித்தியாசமான வேடங்களில் வந்து மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அதன்படி சென்னை கொரட்டூர் வெங்கட்ராமன் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவர், அம்பத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வெள்ளை புடவை அணிந்து விதவை ேகாலத்தில் கையில் மஞ்சள் தாலி கயிறுடன் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். விதவை வேடம் அணிந்து உள்ளே செல்லக்கூடாது என அம்பத்தூர் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தனது வேடத்தை கலைத்துவிட்டு, உள்ளே சென்று மனு தாக்கல் செய்தார்.

இவர் ஏற்கனவே நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பெரம்பூர், ஆர்.கே.நகர் உள்பட 8 தொகுதிகளில் போட்டியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மது குடித்து இறந்தவர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.5 ஆயிம் வழங்க வேண்டும், மறு வாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விதவை கோலத்தில் மனு தாக்கல் செய்ய வந்ததாக ஆறுமுகம் கூறினார்.

‘பராசக்தி’ சிவாஜி வேடத்தில் வந்த பெண்

சென்னை அண்ணாநகர் மேற்கு, திருவல்லீஸ்வரர் நகரை சேர்ந்தவர் நர்மதா (வயது 43). ஆசிரியராக வேலை செய்து வந்தவர், தற்போது சுயதொழில் செய்து வருகிறார். இவர், அம்பத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக நேற்று ‘பராசக்தி’ படத்தில் வரும் சிவாஜி கணேசன்போல் பேண்ட், சட்டை, தலையில் தொப்பியுடன் மனு தாக்கல் செய்ய வந்தார்.

‘பராசக்தி’ படத்தில் பர்மாவில் இருந்து தமிழகம் வரும் சிவாஜி காரில் செல்லும்போது, ‘அம்மா தாயே பிச்சை போடு’ என ஒருவர் பிச்சை கேட்பார். அதற்கு சிவாஜி, “இன்னும் இந்த நிலை மாறவில்லையா?” என்பார். தற்போது தமிழகத்தில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் இருப்பதை சுட்டிகாட்டவே இந்த வேடத்தில் வந்ததாக நர்மதா கூறினார்.

இவர், தன்னந்தனியாக பல நூதன போராட்டங்கள் நடத்தி உள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் வீட்டில் நண்டு விடும் போராட்டம் நடத்தி கைதானதும் குறிப்பிடத்தக்கது.

கொேரானா கவச உடை

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட புதிய தலைமுறை மக்கள் கட்சியைச் சேர்ந்த அசோக்குமார் (41) என்பவர் கொரோனா கவச உடையுடன் வந்து அயனாவரத்தில் உள்ள திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “சென்னையில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பொதுமக்களிடம் அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படவில்லை. பொது இடங்களில் முககவசம் அணியாமல் செல்கிறார்கள். அதனால் எங்கள் கட்சி சார்பில் கொளத்தூர் ெதாகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதுபோல் கொரோனா கவச உடையில் வந்து மனு தாக்கல் செய்தேன்” என்றார். 

Next Story