சமத்துவ மக்கள் கட்சி சார்பில் 37 வேட்பாளர்கள் அறிவிப்பு சரத்குமார், ராதிகா போட்டியில்லை


சமத்துவ மக்கள் கட்சி சார்பில் 37 வேட்பாளர்கள் அறிவிப்பு சரத்குமார், ராதிகா போட்டியில்லை
x
தினத்தந்தி 15 March 2021 11:14 PM GMT (Updated: 15 March 2021 11:14 PM GMT)

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 37 வேட்பாளர்கள் பெயர் கொண்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் சரத்குமார், ராதிகா போட்டியிடவில்லை.

சென்னை, 

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 2 கட்டங்களாக 111 வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இந்திய ஜனநாய கட்சி 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஒரே கட்டமாக நேற்று வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து, சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் முதல்கட்டமாக 37 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை, அக்கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டார்.

வேட்பாளர்களின் பெயர் மற்றும் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் வருமாறு:-

37 தொகுதிகள்-வேட்பாளர்கள்

தூத்துக்குடி-சுந்தர், மதுரை தெற்கு-ஈஸ்வரன், ராஜபாளையம்-விவேகானந்தன், சிவகங்கை-நேசம் ஜோசப், வாணியம்பாடி-ஞானதாஸ், விளாத்திகுளம்-வில்சன், முதுகுளத்தூர்-நவபன்னீர்செல்வம், சங்ககிரி-செங்கோடன், தென்காசி-தங்கராஜ், பத்மநாபபுரம்-ஜெயராஜ், அம்பாசமுத்திரம்-கணேசன், வாசுதேவநல்லூர்-சின்னசாமி, அந்தியூர்-குருநாதன், ஆத்தூர் (தனி)-சிவா, விருதுநகர்-மணிமாறன், திருநெல்வேலி-அழகேசன், திருச்செந்தூர்-ஜெயந்திகுமார், கிருஷ்ணராயபுரம் (தனி)-சரவணன், பெரியகுளம் (தனி)-அரசு பாண்டி, கிள்ளியூர்-ஆண்டனி, உத்திரமேரூர்-சூசையப்பர், விளவங்கோடு-அருள்மணி, கடலூர்-ஆனந்தராஜ், ஆலங்குளம்-செல்வகுமார், திருச்செங்கோடு-குட்டி என்ற ஜனகராஜ், ராதாபுரம்-உத்திரலிங்கம், நாங்குநேரி-சார்லஸ் ராஜா, ஆம்பூர்-ராஜா, ஜோலார்பேட்டை-கருணாநிதி, போளூர்-கலாவதி, உளுந்தூர்பேட்டை-சின்னையன், ரிஷிவந்தியம்-சண்முகசுந்தரம், லால்குடி-முரளிகிருஷ்ணன், சிதம்பரம்-தேவசகாயம், சீர்காழி (தனி)-பிரபு, திருத்துறைப்பூண்டி (தனி)-பாரிவேந்தன், துறைமுகம்-கிச்சா ரமேஷ்.

போட்டியிடவில்லை

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு சரத்குமார் பேசியதாவது:-

எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்ற மாதிரிதான். அவர்களின் வெற்றிக்காக முழுமையாக ஈடுபட வேண்டும் என்றால் கடுமையான முயற்சி தேவை. அதற்காகவும், நாங்கள் அறிவித்து இருக்கிற முதல்-அமைச்சர் வேட்பாளராகிய கூட்டணியின் தலைவர் கமல்ஹாசனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் நானும், ராதிகாவும் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம்.

மாற்றம் வர வேண்டும் என்ற அடிப்படையிலும், ஊழலற்ற சிறந்த ஆட்சி அமைய வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம். எங்கள் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை பார்த்துவிட்டு தொலைநோக்கு அறிக்கை ஒன்றை வெளியிட இருக்கிறேன். சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்வார்.

மக்களின் முதல் கூட்டணி

அ.தி.மு.க., தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சிலதான் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளாக இருக்கின்றன. தேர்தலுக்காக ஒவ்வொரு முறையும் அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். அதை நிறைவேற்றுகிறார்களா என்று தெரியவில்லை.

மாற்றம் வேண்டும் என்று சொன்னால், மக்களின் முதல் கூட்டணியான எங்கள் கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். தேர்தலில் சமமான போட்டி இருப்பதில்லை. தேர்தல் ஆணையம் இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பணம் இருக்கிறவர்கள் மக்களுக்கு கொடுக்கிறார்கள். தடுக்க வேண்டியவர்கள் அதை தடுப்பதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளுக்கு என்று 5 தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கேட்டதாகவும், அதற்காக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் 3 இடங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகவும் சரத்குமார் தெரிவித்தார்.

Next Story