தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி திகழ்கிறது வாக்கு சேகரிப்பின்போது எடப்பாடி பழனிசாமி பேச்சு


தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி திகழ்கிறது வாக்கு சேகரிப்பின்போது எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 16 March 2021 12:01 AM GMT (Updated: 16 March 2021 12:01 AM GMT)

தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி திகழ்வதாக வாக்கு சேகரிப்பின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம், 

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். அங்கு நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:-

மு.க.ஸ்டாலின் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இந்த எடப்பாடியில் பேசும்போது, இந்த தொகுதிக்கு எந்த நலத்திட்ட உதவியும் கிடைக்கவில்லை என்று ஒரு பச்சைப் பொய்யை கூறிவிட்டு சென்றார்.

ஆனால் 2011-ம் ஆண்டுக்கு முன்பு இந்த தொகுதியில் சாலை வசதி எப்படி இருந்தது? தற்போது எவ்வாறு உள்ளது? என்பதை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். 2011-ம் ஆண்டு வாக்கு சேகரிக்கும் போது, எங்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என்று தாய்மார்கள் கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையை நிறைவேற்றி மேச்சேரி - நங்கவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினேன்.

ஆரம்ப சுகாதார நிலையம்

நெசவாளர்கள் நிறைந்த பகுதியான இங்கிருந்து பெங்களூருவுக்குச் செல்ல பஸ் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையினை ஏற்று சேலம், ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி வழியாக பெங்களூருவுக்கு பஸ் இயக்கப்படுகிறது. அதேபோல நங்கவள்ளியில் இருந்து கோயம்புத்தூருக்கு பஸ் இயக்கப்படுகிறது.

நங்கவள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கை வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தந்துள்ளேன்.

எடப்பாடி சட்டமன்றத் தொகுதி முதல்-அமைச்சரின் தொகுதி. நான் உங்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம். மாதம் இருமுறை எடப்பாடி தொகுதிக்கு வந்து உங்களை சந்திக்கிறேன். பல்வேறு திட்டங்களை இந்த தொகுதியில் செயல்படுத்தி கொண்டிருக்கிறேன். தமிழகத்திலே முன்மாதிரி தொகுதியாக எடப்பாடி தொகுதி திகழ்ந்து கொண்டிருக்கிறது.

ஏமாற்ற முடியாது

மு.க.ஸ்டாலின் போகும் இடங்களில் எல்லாம் திண்ணையில் பெட்ஷீட் விரித்து அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் குறை கேட்கின்றாராம். இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது மக்களைப் பற்றி சிந்திக்கவே இல்லை. மக்களின் குறைகளை கேட்கவும் இல்லை, தீர்க்கவும் இல்லை.

தற்போது ஆட்சியில் இல்லாதபோது மக்களிடம் மனுக்களை வாங்கி, அதை பெட்டியில் போட்டு, பூட்டி சீல் வைத்து, ஆட்சிக்கு வந்தவுடன், அந்த பெட்டியை திறந்து, 100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காண்பாராம். இது விஞ்ஞான உலகம். அனைவரிடமும் செல்போன் இருக்கின்றது. தகவல்கள் உடனுக்குடன் செல்கிறது. ஆகவே மக்களை முன்பு போல மு.க.ஸ்டாலின் ஏமாற்ற முடியாது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்

கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

உயிர் முக்கியம். இன்றைக்கு விலையில்லாமல் தடுப்பூசியினை ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம். நான் போட்டுக் கொண்டேன். ஆகவே இளைஞர்கள், தாய்மார்கள், பெரியோர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை போட்டுக் கொண்டு நலமோடு, வளமோடு வாழவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டபுரத்தில் நடந்த பிரசார நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

வெற்றி கூட்டணி

அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா. மற்றும் பல்வேறு கட்சிகள் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்து தேர்தல் களம் காண்கிறோம். நாட்டு மக்களுக்கு நன்மைகளை, சேவைகளை செய்ய வேண்டும் என்பதற்காக, இந்த மிகப்பெரிய கூட்டணியை அமைத்திருக்கின்றோம்.

இந்த மெகா கூட்டணி பெரும்பான்மையான இடங்களிலே வென்று மீண்டும் ஆட்சியை அமைக்கும். இந்த கூட்டணி வெற்றி கூட்டணி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் 234 தொகுதியிலும் தி.மு.க.தான் ஜெயிக்கும் என கூறி வருகிறார். 234 தொகுதியிலும் ஜெயிப்பது இருக்கட்டும் முதலில் எடப்பாடி தொகுதியில் ஜெயித்துக்காட்டுங்கள் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story