‘எடப்பாடி பழனிசாமி பெயரில் சொந்த வீடு, நிலம் இல்லை’ சொத்து பட்டியலில் புதிய தகவல்


‘எடப்பாடி பழனிசாமி பெயரில் சொந்த வீடு, நிலம் இல்லை’ சொத்து பட்டியலில் புதிய தகவல்
x
தினத்தந்தி 16 March 2021 12:12 AM GMT (Updated: 2021-03-16T05:42:48+05:30)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் சொந்த வீடு, நிலம் கிடையாது என்று வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த வருமான வரி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எடப்பாடி, 

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இதில் அவருக்கு ரூ.47 லட்சத்து 64 ஆயிரத்து 542 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளன.

அவரது பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும், குடும்ப சொத்தாக 22 ஏக்கர் நிலம், 6 ஆயிரத்து 700 சதுரடி வீட்டு மனை உள்ளது என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் சொந்த வீடு, நிலம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.15 லட்சம் கடன் இருப்பதாகவும், ரொக்க கையிருப்பு ரூ.6 லட்சம் மற்றும் 100 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். வங்கிகளில் சேமிப்பு மற்றும் வைப்புத்தொகையாக ரூ.37 லட்சத்து 44 ஆயிரத்து 542 இருப்பு உள்ளது.

மனைவி பெயரில் சொத்து

இவருடைய மனைவி ராதா பெயரில், ரூ.1 கோடியே 4 லட்சத்து 11 ஆயிரத்து 631 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ.2 கோடியே 89 லட்சத்து 18 ஆயிரத்து 981 மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளன. இவரது பெயரில் ரூ.14 லட்சத்து 75 ஆயிரத்து 453 மதிப்பில் வீட்டுக்கடனும் உள்ளது.

இவரது ரொக்க கையிருப்பு ரூ.2 லட்சம் மற்றும் 90 பவுன் நகை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகளில் சேமிப்பு மற்றும் வைப்புத்தொகையாக ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 898 இருப்பு உள்ளது.

ஆண்டு வருமானம் குறைந்தது

முதல்-அமைச்சரின் சொத்து பட்டியலில், வருமான வரி கணக்கு தாக்கல் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு விவரமும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் கடந்த 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.10 லட்சத்து 53 ஆயிரத்து 537-ஆக இருந்த ஆண்டு வருவாய், 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து 724 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஒரு ஆண்டில் முதல்-அமைச்சருக்கு சுமார் ரூ.2½ லட்சம் ஆண்டு வருமானம் குறைந்து உள்ளது.

அதேபோல் அவரது மனைவியின் ஆண்டு வருமானமும் கடந்த நிதி ஆண்டில் குறைந்துள்ளது. அதாவது, கடந்த 2018-19-ம் நிதி ஆண்டில் ரூ.22 லட்சத்து 75 ஆயிரத்து 288-ஆக இருந்த ஆண்டு வருவாய், 2019-20-ம் நிதி ஆண்டில் ரூ.9 லட்சத்து 71 ஆயிரத்து 935 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story