நான் அரசியல் பாடம் யாரிடமும் கற்கவில்லை; மக்கள் மனதை படித்தவன் - கமல்ஹாசன்


நான் அரசியல் பாடம் யாரிடமும் கற்கவில்லை; மக்கள் மனதை படித்தவன்  - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 16 March 2021 8:04 PM GMT (Updated: 16 March 2021 8:04 PM GMT)

நான் அரசியல் பாடம் யாரிடமும் கற்கவில்லை, மக்கள் மனதை படித்தவன் என்று பிரசார கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

சேலம்,

சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து கட்சி தலைவர் கமலஹாசன், ஓமலூரில் நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் 3-வது அணி வெற்றி பெற்றது கிடையாது? எப்படி வெற்றி பெறப் போகிறீர்கள் என்று கேட்கின்றனர். எம்.ஜி.ஆர். 3-வது அணியில் தான் வந்தார். அவர் வெற்றி பெறவில்லையா? நான் அவர் மடியில் வளர்ந்தவன். நான் அரசியல் பாடம் யாரிடமும் கற்கவில்லை. மக்கள் மனதை படித்தவன். 

கடந்த 60 ஆண்டுகளாக தோளில் தூக்கி பிடித்த உங்களுக்கு நான் திரும்ப கொடுத்தது என் சினிமா படம் மட்டும் தான். என் வாழ்க்கை இத்துடன் முடிந்து விடக்கூடாது என்று தான் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். எனது மீதமுள்ள வாழ்நாளை மக்களுக்காக ஒதுக்கி உள்ளேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என நான் கூறியபோது கேலி செய்தனர். தற்போது அ.தி.மு.க., தி.மு.க.வினர் அதனை நகல் எடுத்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். ஒருவர் ஆயிரம் ரூபாய் என்றும், மற்றொருவர் 1,500 ரூபாய் என்றும் கூறுகின்றனர்.

ஏழை மக்கள் அதற்கு விலை போகக்கூடாது. நேர்மையான ஆட்சி வந்தால் உங்களுக்கு ரூ.5 லட்சம் வரை கிடைக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு லட்சம் கோடி ரூபாய் கடனில் அரசு இருந்தது. தற்போது ரூ.5.7 லட்சம் கோடி கடனில் உள்ளது. தமிழகத்தை மேம்படுத்த வாங்கியதாக அவர்கள் கூறுகின்றனர். அதற்கான அடையாளம் தெரிகிறதா? என்றால் இல்லை. ஆனால் அவர்கள் தங்களை வளப்படுத்தி கொண்டனர்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். 

Next Story