தேர்தல் ஆணைய நடவடிக்கை; அரசியல் விளம்பரங்கள் இல்லாமல் அழகாக பளிச்சிடும் சுவர்கள் - பொதுமக்கள் பாராட்டு
சென்னையில் அரசியல் விளம்பரங்கள் இல்லாமல் சுவர்கள் அனைத்தும் அழகாக பளிச்சிடுகின்றன.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது என கடந்த மாதம் 26-ந் தேதி தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. இதையொட்டி தேர்தல் அதிகாரிகள் குழுவினர் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் எப்போதுமே சுவர்கள் காலியாக இருப்பதே அரிது. அந்தவகையில் எப்போதுமே ஏதாவது ஒரு கட்சியின் விளம்பரம் இடம்பெற்றிருக்கும். அதுவும் தேர்தல் காலங்களில் சொல்லவே வேண்டாம், சுவர்கள் முழுவதும் அரசியல் விளம்பரத்தை தாங்கியிருக்கும். இதனால் அரசியல் கட்சிகளையும், நகரின் சுவர்களையும் பிரிக்கவே முடியாது என்ற நிலைமை இருந்து வந்தது. சில நேரம் குறிப்பிட்ட சுவரில் விளம்பரம் செய்ய சில கட்சியினருக்கிடையே தகராறு, மோதல் என ஏற்படுவதும் உண்டு.
சமீபகாலமாக தேர்தல் கமிஷனின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக அந்த போக்கு குறைந்து வருகிறது. அந்தவகையில் தற்போது நடைபெறும் தேர்தலையொட்டி ஏராளமான நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக கொடி மரம் நடுதல், பதாகைகளை தொங்கவிடுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், பிரசார வாசகங்களை எழுதுதல் ஆகியவற்றுக்கு தனிநபர் நிலம், கட்டிடம், சுற்றுப்புற சுவர் போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை நகரின் சுவர் பகுதிகளில் அரசியல் சார்ந்த விளம்பரங்கள் இடம்பெறுவது தடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இடம்பெற்றிருந்த விளம்பரங்களும் அழிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் அரசியல் விளம்பரங்கள் இல்லாமல் சுவர்கள் அனைத்தும் அழகாக பளிச்சிடுகின்றன. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைகளை பொதுமக்களும் வரவேற்கிறார்கள். தேர்தல் தாண்டியும் இந்த நடைமுறை தொடர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story