ஆட்டோ டிரைவர்களுக்கு போனஸ்: பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு


ஆட்டோ டிரைவர்களுக்கு போனஸ்: பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 16 March 2021 11:04 PM GMT (Updated: 2021-03-17T04:34:27+05:30)

தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும், நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து செய்வதோடு ஆட்டோ டிரைவர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

சென்னை, 

தமிழக காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

மூத்த தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், மாநில பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, எஸ்.ஏ.வாசு, மாநில செயலாளர் அகரம் கோபி, தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி சுதா உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியுடன் குடிமைப்பணி உள்ளிட்ட அரசு பணிகளுக்கு பயிற்சி வழங்கி பணி அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பூரண மதுவிலக்கு

புதிய தொழில் முனைவோருக்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

நீட் தேர்வு ரத்து

விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு பதிலாக தமிழகத்தில் விவசாயிகளை பாதுகாக்கும் புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும். 31.12.2020 வரை உள்ள அனைத்து கல்விக்கடன்களும் ரத்து செய்யப்படும்.

முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்தி தபால் துறை மூலம் நேரடியாக வழங்கப்படும். இந்து கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவர்.

ஆட்டோ டிரைவர்களுக்கு போனஸ்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு ஆகியவை தன்னாட்சி அமைப்பாக செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆணவ கொலையை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒப்பந்ததாரர்கள் கூட்டணி அமைத்து ஒப்பந்தங்களை பெறுவதற்கு வழிவகுத்த விதிகள் மாற்றி அமைக்கப்படும்.

ஆட்டோ டிரைவர்கள் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதை ஊக்குவிக்க, வாரியத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு ஆட்டோ டிரைவரின் வங்கி கணக்கிலும் ரூ.400 (ஒரு முறை மட்டும்) ஊக்கத்தொகையாக செலுத்தப்படும்.

ஆட்டோ தொழிலாளர்களுக்கு புதுச்சேரியில் வழங்கப்படுவது போன்று தமிழகத்திலும் போனஸ் வழங்கப்படும். வீட்டு வசதி வாரியத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு 5 சதவீத வீடுகள் ஒதுக்கப்படும்.

50 சதவீதம் மானியம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் வங்கிகளில் பெற்ற கடனில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

மேற்கண்ட அறிவிப்புகள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இலவசம் என எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

நிகழ்ச்சி முடிவில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

உழைத்தவர்களுக்கு முன்னுரிமை

மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அரிசி, வீடு போன்றவற்றை இலவசமாக வழங்குவதை ஏற்றுக்கொள்ளலாம். வாஷிங் மெஷின் போன்ற அறிவிப்புகள் ஏற்புடையது அல்ல. இவை வாக்குகளை பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள். இதனால், வாழ்வாதாரம் உயர எந்த வாய்ப்பும் இல்லை.

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை பொறுத்தமட்டில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மூத்த தலைவர்களின் வாரிசுகளில் சிலர் கட்சிக்காக உழைத்துள்ளதால் அவர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story