பரபரப்பாக இயங்கும் சென்னை பழைய விமானநிலையம் விமானத்தில் பறந்து சூறாவளி பிரசாரம் செய்யும் தலைவர்கள்


பரபரப்பாக இயங்கும் சென்னை பழைய விமானநிலையம் விமானத்தில் பறந்து சூறாவளி பிரசாரம் செய்யும் தலைவர்கள்
x
தினத்தந்தி 16 March 2021 11:19 PM GMT (Updated: 16 March 2021 11:19 PM GMT)

தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சி தலைவர்கள் தனி விமானங்களில் பறந்து சென்று சூறாவளி பிரசாரம் செய்கிறார்கள். இதற்காக ஒரு நிமிடத்திற்கு ரூ.3,270 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை ஜனாதிபதி, பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்கள் மற்றும் தனி விமானங்களில் பயணம் செய்பவர்கள் பயன்படுத்தி வந்தனர். மற்ற நேரங்களில் எந்தவித பரபரப்பும் இன்றி வெறிச்சோடி இருக்கும். ஆனால் பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியாகும். தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி விட்டதால் கட்சி தலைவர்கள் தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயணம் செய்வது அதிகமாகி விட்டன.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் நடிகா் கமல்ஹாசன், காஞ்சீபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு ஹெலிகாப்டரில் மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்தாா். பின்னர் கோவைக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய தனி விமானத்தில் புறப்பட்டு சென்றாா்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு மாலை திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டு சென்றாா்.

பிரதமா் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மத்திய மந்திரிகள் தனி விமானத்தில் சென்னை வந்து பிறகு தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்று உள்ளனர்.

அரசியல் கட்சி தலைவா்கள் பறந்து, பறந்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் பழைய விமான நிலையத்தில் தனி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா் சேவை அதிகரித்து உள்ளன.

கட்டணம்

இதனால் சென்னை பழைய விமான நிலையம் வி.ஐ.பி.கள் விமான நிலையமாக களைகட்ட தொடங்கி உள்ளது. தோ்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை நெருங்கும் போது இன்னும் அதிகமான தலைவா்கள் தனி விமானம், ஹெலிகாப்டா்களை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

தனி விமானங்களுக்கு தனியாா் விமான நிறுவனங்கள் விமானங்களின் இருக்கைகளுக்கு தகுந்தவாறு கட்டணங்களை நிா்ணயித்துள்ளன. அதன்படி 6 இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு நிமிடத்துக்கு ரூ.1,017-ம், 7 இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு நிமிடத்துக்கு ரூ.3,270-ம், 14 இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு நிமிடத்துக்கு ரூ.7,194-ம், 14 இருக்கைகள் உடைய விமானத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3,59,700-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர விமான நிலையத்தில் இருந்து புறப்பட, தரையிறங்க ஜி.எஸ்.டி.யுடன் கட்டணமும் வசூலிக்கப்படும்.

டீலக்ஸ் தனி விமானம் கட்டணம் சற்று அதிகம். அதில் 6 இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு நிமிடத்திற்கு ரூ.1,235-ம், 8 இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு நிமிடத்துக்கு ரூ.3,415-ம், 9 இருக்கைகள் கொண்ட விமானத்தில் ஒரு நிமிடத்துக்கு ரூ.5,232-ம் வசூலிக்கப்படும்.

அதேபோல் 5 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டருக்கு ஒரு நிமிடத்திற்கு ரூ.2,543 என கட்டணம் வசூலிக்கும் விமான நிறுவனங்கள், தோ்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடையும்போது கட்டணங்களை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு

இந்த தனி விமானங்கள், ஹெலிகாப்டா்களை முன்பதிவு செய்பவா்கள் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களுடன், பயணிக்கும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும்.

பயணிகள் விமானங்களில் செல்பவா்களுக்கு உள்ளது போல் பாதுகாப்பு சோதனை உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் நடத்தப்படும். பயணிப்பவா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம்.

தோ்தல் விதிமுறை அமலில் உள்ளதால் பயணிப்பவா்கள் தங்களுடன் பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்கிறாா்களா? என்பதை தோ்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் தனி விமான பயணிகளையும் கண்காணிக்கின்றனா். செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களை சோ்ந்த பறக்கும் படையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

Next Story