‘தமிழகத்தில் நீர் மேலாண்மையை உருவாக்குவதே எனது லட்சியம்’ தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘தமிழகத்தில் நீர் மேலாண்மையை உருவாக்குவதே எனது லட்சியம்’ தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 18 March 2021 6:32 AM IST (Updated: 18 March 2021 6:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நீர் மேலாண்மையை உருவாக்குவதே எனது லட்சியம் என திருவையாறு தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தஞ்சாவூர், 

தஞ்சையை அடுத்த திருவையாறு தேரடியில் பா.ஜ.க. வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

டெல்டா மாவட்ட விவசாயிகள் எல்லாம் அச்சத்தில் உறைந்து போய் இருந்தீர்கள். ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் பொன் விளையும் பூமியான டெல்டா விளை நிலங்கள் எல்லாம் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் இருந்தீர்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்பூர்வமாக ஆக்கியது. ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான்.

அதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட துணை நின்றவர் இப்போது தி.மு.க. தலைவராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின். அவர் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது இந்த திட்டம் வந்தது. நானும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகளுடைய துன்பங்கள், துயரங்கள், க‌‌ஷ்டங்களை உணர்ந்த காரணத்தினால் அவர்களை அச்சத்தில் இருந்து, துயரத்தில் இருந்து மீட்டெடுக்க சட்டத்தின் வாயிலாக சட்டப்பாதுகாப்பு கொடுத்து இன்றைக்கு டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உங்களுக்கு ஏற்படுத்தி தந்து இருக்கிறேன்.

சட்டபோராட்டம்

காவிரி நீர் பிரச்சினைக்காக சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா சட்டபோராட்டம் நடத்தினார். அந்த வேளையில் துரதி‌‌ருஷ்டவசமாக அவர் மறைந்து விட்டார். இருந்தாலும் அ.தி.மு.க. அரசு அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக, விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டபோராட்டத்தின் வாயிலாக சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றது அம்மா வழியிலான எனது தலைமையில் இருக்கின்ற அ.தி.மு.க. அரசு.

நீர் மேலாண்மையை உருவாக்குவதே லட்சியம்

இனிமேல் தண்ணீருக்காக கர்நாடகத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. பருவகாலத்தில் உரிய தண்ணீர் கிடைக்கும் வகையில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை தொடங்கி இருக்கிறேன்.

தமிழகத்தில் நீர் மேலாண்மையை உருவாக்குவதே எனது லட்சியம். காவிரி-கோதாவரி திட்டத்தை நடைமுறைபடுத்த ஆந்திர மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரிகள் நமக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறார்கள். நமது பிரதமரிடத்திலும் இதை எடுத்து சென்றேன். அவரும் அதற்கு தேவையான நிதியை தருவதாக சொல்லி இருக்கிறார். இந்த திட்டத்திற்கு ரூ.80 ஆயிரம் கோடி வேண்டும்.

இந்த நிதி இருந்தால் தான் காவிரி-கோதாவரி திட்டத்தை நிறைவேற்ற முடியும். பிரதமரிடம் சொன்னவுடன் அவரும் தமிழகத்திற்கு தேவையான திட்டம், அற்புதமான திட்டம். நானும் உதவி செய்கிறேன் என்றார். ஆக மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும்போது இந்த காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் வெற்றி பெறும்.

நானும் விவசாயி

விவசாயிகள் நன்றாக வாழ வேண்டும். அவர்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும். அதற்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி எப்போது பார்த்தாலும் நானும் விவசாயி என சொல்லிக்கொள்கிறார் என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். நான் ஒரு விவசாயி. அதனால் விவசாயி என சொல்கிறேன். இதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

விவசாயிகள் எவ்வளவு க‌‌ஷ்டப்படுகிறார்கள், எவ்வளவு துன்பப்படுகிறார்கள், எவ்வளவு வேதனைப்படுகிறார்கள் என்பது ஒரு விவசாயியான எனக்குத்தான் நன்கு தெரியும். இந்த க‌‌ஷ்டத்தில் இருந்து விவசாயிகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான திட்டங்களை கொண்டு வந்தால்தான் விவசாயிகளை க‌‌ஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க முடியும் என இத்தனை திட்டங்களை செய்து இருக்கிறேன். தி.மு.க. ஆட்சியில் இப்படிப்பட்ட திட்டங்களை கொண்டு வந்தார்களா?.

மும்முனை மின்சாரம்

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி எல்லா வீடுகளுக்கும் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் விலையில்லாமல் கொடுக்கப்படும். மகளிர் சுயஉதவிக்குழுவினர் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும். கேபிள் இணைப்பு கட்டணமில்லாமல் தொடர்ந்து வழங்கப்படும்.

டெல்டா விவசாயிகள் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1-ந்தேதி முதல் அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கும்பகோணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர், ‘மு.க.ஸ்டாலின் செல்கின்ற இடமெல்லாம் பொய் பேசிக் கொண்டிருக்கிறார். அவதூறு பிரசாரம் செய்கிறார்’ என்று குற்றம் சாட்டினார்.

Next Story