தொகுதி கண்ணோட்டம்: திருப்போரூர்


தொகுதி கண்ணோட்டம்: திருப்போரூர்
x
தினத்தந்தி 18 March 2021 4:09 PM GMT (Updated: 2021-03-18T21:39:39+05:30)

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியும் ஒன்றாகும்.

சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் மாமல்லபுரம், உலக தரம் வாய்ந்த கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவ நகரம், பையனூர் திரைப்பட நகரம், பொழுதுபோக்கு மையங்கள், அரசு கலைக்கல்லூரி, சிற்ப கல்லூரி மற்றும் ஏராளமான தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளும் இங்கு அமைந்துள்ளன. தனியார் பள்ளிகளும் உள்ளன. ஐ.டி. தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிறுசேரி தொழிற்நுட்ப பூங்கா, கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் நெம்மேலி ஆகியவை அமைந்துள்ன.

திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தலித் மற்றும் வன்னியர் சமுதாயத்தினர் சரி சமமான அளவில் உள்ளனர். மேலும், மீனவர், முதலியார், யாதவர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தினரும் உள்ளனர்.

தொழிற்நுட்ப வளர்ச்சி பெற்ற இந்த தொகுதியில் விவசாயத்தை காக்கும் வகையில் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டில் பெரிய ஏரிகளும் உள்ளன. திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகளும் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய 100-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன.வடக்கே சோழிங்கநல்லூர் தொகுதி, தெற்கே செங்கல்பட்டு மற்றும் செய்யூர் தொகுதிகளும், மேற்கே தாம்பரம் தொகுதி போன்றவை இதன் எல்லைகளாகும்.

1967-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடைபெற்ற 12 சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், பா.ம.க. ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.1967, 1971-ம் ஆண்டுகளில் முனு ஆதி (தி.மு.க.), 1980, 1987-ம் ஆண்டுகளில் சொக்கலிங்கம் (தி.மு.க.), 1984-ம் ஆண்டு தமிழ்மணி (அ.தி.மு.க.), 1989-ம் ஆண்டு திருமூர்த்தி (தி.மு.க.), 1991-ம் ஆண்டு தனபால் (அ.தி.மு.க.), 1996-ம் ஆண்டு சொக்கலிங்கம் (தி.மு.க.), 2001-ம் ஆண்டு கணிதா சம்பத் (அ.தி.மு.க.), 2006-ம் ஆண்டு மூர்த்தி (பா.ம.க.), 2011-ம் ஆண்டு தண்டரை மனோகரன்( அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கோதண்டபாணி போட்டியிட்டு 70 ஆயிரத்து 215 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்

மொத்த வாக்காளர்கள் 2,54,307

பதிவானவை 2,01,141

கோதண்டபாணி(அ.தி.மு.க.) 70,215

விஸ்வநாதன்(தி.மு.க.) 69,265.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் திருப்போரூர் எம்.எல்.ஏ. கோதண்டபாணியும் ஒருவர். இதனால் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தலுடன் திருப்போரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இதயவர்மன் 1 லட்சத்து 3 ஆயிரத்து 248 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் ஆறுமுகம் 82 ஆயிரத்து 235 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

2019-ம் ஆண்டு இடைத்தேர்தல்

மொத்த வாக்காளர்கள் 2,70,758

பதிவான வாக்குகள் 2,18,237

இதயவர்மன் (தி.மு.க.) 1,03,248

ஆறுமுகம்(அ.தி.மு.க.) 82,235

2019-ம் ஆண்டு சட்டமன்ற இடைத்தேர்தலின்போது 2 லட்சத்து 70 ஆயிரத்து 758 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 93 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.

திருப்போரூர் தொகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டுமனை பிரிவுகள், விவசாய பண்ணைகள் என ரியல் எஸ்டேட் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.

தொகுதியில் மீனவ மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையான தூண்டில் வளைவு, மீன் இறங்குதளம் உள்ளிட்டவை மற்றும் சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் பஸ்நிலையம், சாலை வசதிகள், அரசு விடுதிகள், வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கான 24 மணி நேரம் சிகிச்சை அளிக்கக்கூடிய பல்நோக்கு ஆஸ்பத்திரி, கிழக்கு கடற்கரை சாலையில் காலையும், மாலையும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல், திருப்போரூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமை, கேளம்பாக்கம் முதல் திருப்போரூர் வரையிலான போக்குவரத்து நெரிசல், கிடப்பில் உள்ள கோர்ட்டு, தீயணைப்பு நிலையம், வட்டார போக்குவரத்து அலுவலகம், பொதுப்பணி துறை அலுவலகம் புறவழிச்சாலை திட்டம் சென்னை- சிறுசேரி இடையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்து, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பது போன்றவை இந்த தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளன.

இந்த தொகுதியில் உள்ள ஏரிகளை தூர்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் தலையாய கோரிக்கையாக உள்ளது. தொகுதியின் முக்கிய இடங்களில் நெல் கொள்முதல் மையம் அமைத்திட வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றாகும்.

திருப்போரூர், திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மின்சார வசதி செய்து தரவேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை-எளிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

நடைபெற உள்ள தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.

பா.ம.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி, அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டபாணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் லாவண்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் மோகனசுந்தரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் 2,93,251

ஆண்கள் 1,43,556 

பெண்கள் 1,49,658

மூன்றாவது பாலினம் 37

Next Story