வேட்பு மனு தாக்கலின் போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் நலம் விசாரித்த விஜய் வசந்த்


வேட்பு மனு தாக்கலின் போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் நலம் விசாரித்த விஜய் வசந்த்
x
தினத்தந்தி 19 March 2021 3:32 AM IST (Updated: 19 March 2021 3:32 AM IST)
t-max-icont-min-icon

வேட்பு மனு தாக்கலின் போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் நலம் விசாரித்த விஜய் வசந்த் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தும் வந்தார். சுரேஷ்ராஜன் வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலகத்துக்குள் சென்றார். விஜய் வசந்த் வெளியே இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

அப்போது நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் எம்.ஆர்.காந்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வந்தார். அவருடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.

அவர்களை கண்டதும் விஜய்வசந்த் வேகமாக எழுந்து பொன்.ராதாகிருஷ்ணன் அமர்ந்து இருந்த இடத்துக்கு சென்றார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பொன்.ராதாகிருஷ்ணன், விஜய் வசந்தை கண்டதும் இருக்கையில் இருந்து எழுந்தார். இருவரும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்ததுடன் நலம் விசாரித்து கொண்டனர். இருவரும் கைகளை குலுக்கி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து நாகர்கோவில் பா.ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்திக்கும் விஜய்வசந்த் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதாவும், காங்கிரசும் நேரடியாக களம் காணும் நிலையில், எதிரும், புதிருமாக உள்ள கட்சிகளின் வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதுடன் ஒருவருக்கொருவர் சிரித்த முகத்துடன் நலம் விசாரித்து வாழ்த்துகளை பரிமாறி கொண்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

முன்னதாக விஜய் வசந்த் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 


Next Story