ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க., பா.ஜ.க. வெற்றி பெற்றுவிடக்கூடாது மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்


ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க., பா.ஜ.க. வெற்றி பெற்றுவிடக்கூடாது மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 19 March 2021 4:49 AM IST (Updated: 19 March 2021 4:49 AM IST)
t-max-icont-min-icon

200 அல்ல 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம் என்றும் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கும்மிடிப்பூண்டியில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது:-

உங்களுடன் இருப்பவன்

நான் உங்களை எல்லாம் தேடி - நாடி வந்திருக்கிறேன். தேர்தலுக்காக மட்டும் வந்து போகிறவன் இந்த ஸ்டாலின் அல்ல; எப்போதும் எந்த நேரத்திலும் உங்களோடு இருப்பவன், உங்களுடைய சுக துக்க நிகழ்ச்சிகளில் உரிமையோடு கலந்து கொள்பவன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த உரிமையோடு, உணர்வோடு உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். 50 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தை - வரலாற்றைப் பெற்றிருப்பவன்தான் இந்த ஸ்டாலின் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

தி.மு.க.வில் ஒரு தொண்டனாக 14 வயதில் கோபாலபுரத்தில் என்னை இணைத்துக்கொண்டு, அங்கே இருக்கும் மாணவர்களை ஒன்று திரட்டி ஒரு முடி திருத்தும் நிலையத்தில் இளைஞரணி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அந்த வட்டத்தில் பகுதி பிரதிநிதியாக, சென்னை மாவட்ட பிரதிநிதியாக, பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, துணை பொதுச்செயலாளராக, பொருளாளராக, கருணாநிதி உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது இந்த இயக்கத்தின் செயல் தலைவராக, இன்றைக்கு தி.மு.க. தலைவனாக பொறுப்பேற்று பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.

செல்போன் கொடுத்தார்களா?

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டவற்றை நான் பட்டியல் போட்டு சொல்லி வருகிறேன். இதேபோல இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் செய்தவற்றைப் பட்டியல் போட்டு சொல்வதற்கு தயாராக இருக்கிறாரா?. ஆளுங்கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

செய்ய முடியாத காரியங்களை-வாய்க்கு வந்த படியெல்லாம்-பொத்தாம் பொதுவாக பல உறுதிமொழிகளை சொல்லி இருக்கிறார். அதில் எது நடக்கும் எது நடக்காது என்று மக்களுக்கு தெரியும். உதாரணமாக, அனைவருக்கும் செல்போன் இலவசமாக கொடுப்போம் என்று சொன்னார்கள். அதை இப்போதும் சொல்லி இருக்கிறார்கள். இங்கு இருக்கும் யாருக்காவது அ.தி.மு.க. ஆட்சியில் இலவசமாக செல்போன் கொடுத்து இருக்கிறார்களா?.

ரூ.4 ஆயிரம் வழங்குவோம்

விவசாய கடன் ரூ.14,000 கோடி தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்கள். ஆனால் வெறும் 5,000 கோடிதான் செய்திருக்கிறார்கள். மீதமிருக்கும் அந்த கடனை நாம் ஆட்சிக்கு வந்துதான் தள்ளுபடி செய்யப்போகிறோம். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு இருக்கும் நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று நான் சொன்னேன். இதை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலும் சொன்னேன். அதை மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டதாக முதல்-அமைச்சர் பழனிசாமி அப்போது விமர்சித்தார். இப்போது அறிவித்திருக்கிறீர்களே, நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றப்போகிறீர்களா?

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னோம். நிதி இல்லை என்று வெறும் 1,000 ரூபாய் மட்டும் கொடுத்தார்கள். மீதம் 4,000 ரூபாய் நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிச்சயமாக வழங்கப்படும் என்ற அந்த உறுதியையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜவுளிப்பூங்கா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மேம்படுத்தும் வரையில் சொத்துவரி அதிகரிக்கப்படாது. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். மீஞ்சூர்-பொன்னேரியில் புறவழிச்சாலை அமைக்கப்படும். கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். கும்மிடிப்பூண்டியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். மெட்ரோ ரெயில் சேவை திருவொற்றியூரில் இருந்து மீஞ்சூர் வழியாக கும்மிடிப்பூண்டி வரையிலும் நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கும்மிடிப்பூண்டிக்கு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.

எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகில் சுற்றுலாத்தலம் அமைக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் குளிர்பதனக் கிடங்கு உருவாக்கப்படும். பொன்னேரி அரசு மருத்துவமனை நவீன வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி வழங்கப்படும் என்ற உறுதிமொழிகளைச் சொல்லி இருக்கிறோம்.

ஒரு இடத்தில் கூட...

200 அல்ல 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம். ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிடக்கூடாது. அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அது பா.ஜ.க.வின் வெற்றிதான். இன்றைக்கு அ.தி.மு.க. பா.ஜ.க.வின் அடிமையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story