பெண்கள் பாதுகாப்பில் அ.தி.மு.க. அரசு ஒருபோதும் அக்கறை எடுப்பதில்லை; கமல்ஹாசன் குற்றச்சாட்டு
பெண்கள் பாதுகாப்பில் அ.தி.மு.க. அரசு ஒருபோதும் அக்கறை எடுப்பதில்லை என கமல்ஹாசன் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
சென்னை,
கடந்த 2012-ம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செலவினங்களுக்காக நிர்பயா நிதியம் என்ற நிதியத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்த நிதியத்திற்கு, ஆரம்ப கட்டமாக 10 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியம், அனைத்து மாநிலங்களுக்கும் நிதியை ஒதுக்கி வருகிறது.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நிர்பயா திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடியில் வெறும் ரூ.6 கோடி மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளது. மீத தொகையை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை 100 சதவீதம் செலவிடுவதை உறுதி செய்ய உயர்மட்ட குழு அமைக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சூரியபிரகாசம் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி சென்னை ஐகோர்ட்டில் நேற்று நடந்த வழக்கு விசாரணையில், 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதி 190 கோடியில் வெறும் 6 கோடியை மட்டுமே அ.தி.மு.க. அரசு பயன்படுத்தி உள்ளது. முழுதொகையும் பயன்படுத்த உத்தரவிட கோரி பொதுநல மனு ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பில் அ.தி.மு.க. அரசு ஒருபோதும் அக்கறை எடுப்பதில்லை என்பதன் எளிய உதாரணம் இது என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story