திருவண்ணாமலை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு


திருவண்ணாமலை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 March 2021 9:22 PM GMT (Updated: 19 March 2021 9:22 PM GMT)

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை, 

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அதையொட்டி வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் வந்தவாசி தாலுகாவைச் சேர்ந்த சக்கரபாணி, கலசபாக்கம் தாலுகா மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 விவசாயிகள் திருவண்ணாமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய பெரியார் சிலை அருகில் இருந்து நடந்து வந்தனர்.

அப்போது திடீரென வேட்புமனு தாக்கல் செய்ய வந்த 2 விவசாயிகளும் தங்களின் ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக சாலையில் நடந்து வந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து, அவர்கள் மீது துணிகளால் போர்த்தி அவர்களை வேட்புமனு தாக்கல் செய்ய செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

16 பேர் கைது

இதையடுத்து அவர்கள் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

கோரிக்கையை நிறைவேற்றாத அமித்ஷா

நாடாளுமன்ற தேர்தலின்போது மத்திய மந்திரி அமித்ஷா தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் 10 பேரை டெல்லிக்கு அழைத்து சிறு, குறு விவசாயிகளுக்கு அளித்த பென்ஷன் ரூ.6 ஆயிரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் அளிப்பதாகவும், விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை தருவதாகவும், கோதாவரி-காவிரி இணைப்பை அறிவித்து நிதி ஒதுக்குவதாகவும் அறிவித்து, அதை நிறைவேற்றுவதாக கூறினார்.

ஆனால் அவர், முதல் கோரிக்கையைத் தவிர மற்ற எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளின் சட்டை, வேட்டி, துண்டு, கோவணம் போன்றவற்றை உருவி விட்டதால் விவசாயிகள் அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாக சென்று சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட மனு தாக்கல் செய்ய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story