‘நீட்' தேர்வுக்கு பதில் ‘சீட்' தேர்வு 108 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கமல்ஹாசன் பேட்டி
குறைந்த விலையில் பொருட்கள் வழங்க மக்கள் கேன்டீன் உருவாக்கப்படும் என்றும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக ‘நீட்’ தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு நடத்தப்படும் என்றும் 108 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டு கமல்ஹாசன் கூறினார்.
கோவை,
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்சில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. அப்போது அவர் 108 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த தேர்தல் அறிக்கை நீண்ட கால தொலைநோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்காக அவசரப்பட்டு உங்கள் மனம் கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது அல்ல. இது ஒரு வாழும் உயிருள்ள ஆவணம் என்று தான் சொல்ல வேண்டும்.
வளமான தமிழகம்
இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து திட்டங்களையும் செய்து விட்டாலே நல்ல ஒரு வளமான தமிழகத்தை உருவாக்க முடியும். அந்த நம்பிக்கையை உங்களுக்கு கொடுப்பதற்காக இந்த தேர்தல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவசங்கள் என்பது அவர்கள் உங்களுக்கு இலவசமாக கொடுப்பது என்பது இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசுக்கு ஏற்கனவே 5 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதற்கு மேல் உங்களுக்கு இலவசங்கள் கொடுத்தால் உங்கள் தலை மீது மேலும் கடன் சுமை ஏற்றுகிறார்கள் என்று அர்த்தம். வாஷிங்மிஷின் இலவசமாக உங்கள் வீட்டுக்கு வந்து விட்டது என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர்கள் கொடுக்கும் இலவசத்துக்கான பில் உங்கள் தலையில் விழும்.
இலவசங்கள் தேவையில்லை
எனவே அவர்களை குறைகூறுவதை விட்டு விட்டு புதிய திட்டத்தை நாம் கொண்டு வர வேண்டும். 5 லட்சம் கோடி ரூபாய் கடனை அடைத்து விட்டு அதில் இருந்து மீட்க வேண்டும் என்றில்லாமல் லாபகரமாக நடத்துவது என்பது தான் எங்கள் தேர்தல் அறிக்கை. போக்குவரத்து துறை, மின்சார துறை உள்பட எந்த துறையாக இருந்தாலும் அது தமிழகத்தில் நஷ்டத்தில் தான் இயங்குகிறது.
ஆனால் பக்கத்து மாநிலங்களில் அவை லாபகரமாக செயல்படுகின்றன. போக்குவரத்து துறையில் லாபம் எப்படி வர வேண்டுமென்றால் அதில் வேலை செய்பவர்களை அதில் பங்குதாரர்களாக்க வேண்டும். மக்களுக்கு இலவசம் தேவையில்லை. சாதாரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளத்தை முறையாக கொடுத்தாலே போதும். இது ஒரு நீண்ட கால திட்டம்
திறமைக்கேற்ற ஊதியம்
இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊதியம் கொடுக்கிறேன். ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கிறேன் என்று அரசியல் கட்சிகள் கூறுகின்றன. அது எப்படி வழங்கப்பட வேண்டுமென்றால் ஊதியம் என்றால் உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுத்தால் தானே அது நியாயம். ஒருவருக்கு ஒரு திறமை இருக்கும். அந்த திறமைக்கேற்ற ஊதியத்தை அவருடைய வீடு வரை கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
உங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று கூறி விதை வழங்கப்படுவது ஒரு திட்டம். அல்லது உரிய பயிற்சிகள் அளித்து மாதம் 10 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று திட்டம் வகுத்து கொடுப்பது மற்றொரு திட்டம். எனவே நம்முடைய திறமையையும் மேம்படுத்த வேண்டும். திறமைக்கேற்ற ஊதியமும் வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் திட்டம்.
இதன் மூலம் அரசுக்கு பொருளாதார பளு இருக்காது. மேலும் இல்லத்தரசிகளுக்கு வேலைவாய்ப்புகள் வீடு தேடி வரும். நாங்கள் கூறியுள்ள திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் தான்.
மக்கள் கேன்டீன்
அரசியல் கட்சியினர் தவறுகளை மறைப்பதற்கு இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இது அபூர்வமான தேர்தல் அறிக்கை. இதில் நாங்கள் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் கேன்டீன் உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறோம். அதை அம்மா உணவகத்துடன் ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது. ராணுவ கேண்டீனில் அவர்களுக்கு தேவையான பொருட்கள் தரமாக கிடைப்பது போல மக்கள் கேண்டீனிலும் மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் தரமாக கிடைக்கச் செய்வோம்.
அதில் இலவசங்கள் இருக்காது. இந்த தேர்தல் அறிக்கை தமிழக அரசியலை மாற்றிக்காட்டும். மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக ‘நீட்’ தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு நடத்தப்படும்.
கோவை மட்டுமல்லால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் மோனோ ரெயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
தற்சார்பு கிராமங்கள்
234 தொகுதிகளிலும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் புரா திட்டமான தற்சார்பு கிராமங்கள் உருவாக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் என்பது வெறும் போர்டு மட்டும் எழுதி வைத்துக்கொள்வது அல்ல. திட்டங்களை தீட்டி செயல்படுத்துவது தான்.
அமைப்பு சாரா தொழிலாளர்களை அமைப்பு ரீதியான திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை அரசே வழங்கும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
மகள்கள் வரமாட்டார்கள்
தொடர்ந்து அவர் கூறும்போது, மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. அது அரசியல் வியாதியாக இருக்கலாம். அந்த பிரச்சினையில் சட்டம் தன் கடமையை செய்யும். என் மகள்கள் தேர்தல் பிரசாரத்துக்காக வரமாட்டார்கள். என்னை பார்க்க வேண்டுமானால் வருவார்கள் என்றார்.
பேட்டியின்போது, மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகரும், துணைத்தலைவருமான பொன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய அம்சங்கள்
கமல்ஹாசன் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மேலும் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* 1 முதல் 2 கோடி பேருக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பை உறுதி செய்வது.
* நதி நீர் இணைப்பு.
* தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை 20 சதவீத வளர்ச்சிக்கு உறுதி செய்வது.
* அரசு பள்ளி கல்வி உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும்.
* நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசு நிறுவனங்களும் லாபத்தில் இயங்க அறிவார்ந்த நடவடிக்கை.
* இடஒதுக்கீடு பெறுவோரின் வாழ்வாதாரம் உயரும் வரை இடஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்படும்.
* தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு மதுவிலக்கை அமல்படுத்துவதே எங்கள் இலக்கு.
* அரசு வேலைவாய்ப்பில் 69 சதவீதம் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story