எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆண்டுதோறும் சொத்துப்பட்டியலை வெளியிட வலியுறுத்துவோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேர்தல் வாக்குறுதி
மாநில உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆண்டுதோறும் சொத்துப்பட்டியலை வெளியிட வலியுறுத்துவோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன், தேர்தல் அறிக்கை குழு தலைவர் சண்முகம், உறுப்பினர்கள் கண்ணன், தீபா, மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.
சொத்து விவரம்
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
மாநில உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம். கேரளாவை போன்று அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கவும், மதவழிபாட்டு நிகழ்ச்சிகளை தமிழில் நடத்தவும் வலியுறுத்துவோம். இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை தடுக்க பாடுபடுவோம்.
முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும் என்பதை கட்டாயமாக்க பாடுபடுவோம்.
ஊழல் புகார் குறித்து விசாரணை
முதல்-அமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து முழுமையான விசாரணை நடத்தி வழக்கு தொடுக்க குரல் எழுப்புவோம். அனைத்து பணி நியமனங்களும் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்வோம்.
தென்மாவட்டங்களில் எண்ணெய், பனை, தீப்பெட்டி, பட்டாசு போன்ற தொழில்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க பாடுபடுவோம். அரசிடம் இருந்து மக்களுக்கு தேவையான சேவையை விரைவாகவும், வெளிப்படையாகவும் பெறுவதற்கு சேவை பெறும் உரிமை சட்டம் இயற்ற வலியுறுத்துவோம்.
சட்டமன்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொலைக்காட்சி மற்றம் சமூகவலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்ப வற்புறுத்துவோம்.
கடல்வழி போக்குவரத்து
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும், தமிழர்கள் 7 பேரை விடுவிக்கவும் தொடர்ந்து குரல் கொடுப்போம். கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவோம்.
சென்னை-புதுச்சேரி-கடலூர்-நாகப்பட்டினம் கடல்வழி போக்குவரத்திற்கு வற்புறுத்தப்படும். ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் இலவச வீட்டு மனை வழங்கவும், மற்றவர்களுக்கு நியாயமான விலையில் அரசு மூலம் வீட்டுமனை விற்பனை செய்யவும் வலியுறுத்துவோம்.
போலீசாருக்கு சங்கம்
காவல்துறையினருக்கு சங்கம் வைக்கும் உரிமை வழங்கிடவும், அவர்களுக்கு 8 மணி நேரம் மட்டும் பணி என்பதை உறுதி செய்யவும் குரல் கொடுப்போம்.
அனைத்து அரசுத்துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வேலையில்லா இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவும் வற்புறுத்துவோம்.
இலவச இணையதள வசதி
அனைத்து மாணவர்களுக்கும் இலவச இணையதள வசதி செய்து கொடுக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச மாத பராமரிப்பு தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கிடவும், சிறப்பு பிரிவினரான முதுகு தண்டுவடம், தசைச்சிதைவு, மனவளர்ச்சி பாதித்த கடும் ஊனமுற்றவர்களுக்கு மாத பராமரிப்பு உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் குரல் கொடுப்போம்.
பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கவும், 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் அயராது பாடுபடுவோம்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
Related Tags :
Next Story