வேட்பு மனு பரிசீலனை : மனுக்கள் ஏற்றுகொள்ளபட்டவர்கள் ; நிறுத்தி வைக்கபட்டவர்கள் விவரம்


வேட்பு மனு பரிசீலனை : மனுக்கள் ஏற்றுகொள்ளபட்டவர்கள் ; நிறுத்தி வைக்கபட்டவர்கள் விவரம்
x
தினத்தந்தி 20 March 2021 6:41 AM GMT (Updated: 20 March 2021 6:44 AM GMT)

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது;மனுக்கள் ஏற்றுகொள்ளபட்டவர்கள் நிறுத்தி வைக்கபட்டவர்கள் விவரம் வருமாறு:-

சென்னை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். எனவே கடைசி நாளான நேற்று சுயேச்சைகள்தான் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 523 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 55 மனுக்களும், குறைந்தபட்சமாக பா.ஜ.க. வேட்பாளராக நடிகை குஷ்பு களம் இறங்கி உள்ள ஆயிரம்விளக்கு தொகுதியில் 14 மனுக்களும் தாக்கலாகி உள்ளது.

இதில் ஒரு சில வேட்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்களை அளித்திருக்கிறார்கள்.

கரூரில் அதிகபட்சம்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியானது. ஒருசிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இதன் காரணமாக மொத்தம் 6 ஆயிரத்து 222 வேட்புமனுக்கள் தாக்கலாகி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் சார்பில் 5 ஆயிரத்து 274 மனுக்களும், பெண்கள் சார்பில் 945 மனுக்களும், திருநங்கைகள் சார்பில் 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 90 பேர் 97வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை செய்யூர் ஆகிய தொகுதிகளில் தலா 8 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 15 வேட்புமனுக்கள் நேற்று முன்தினம் வரை பெறப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் கடைசி நாளான நேற்று மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு மதியம்3 மணிக்குள் வந்தவர்களுக்கு ‘டோக்கன்' வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் காத்திருந்து வேட்புமனுவை தாக்கல் செய்து சென்றனர். மதியம் 3 மணியை தாண்டி வந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

கடைசிநாளில் அதிகமாக சுயேச்சை வேட்பாளர்கள் குவிந்ததால் அவர்களது வேட்புமனு விண்ணப்பம், சொத்துப்பட்டியல் ஆகியவற்றை சரிபார்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலக ஊழியர்கள் பம்பரம் போல் சுழன்று பணியாற்றினார்கள். இந்த பணி நள்ளிரவை கடந்தும் நடைபெற்றது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எத்தனை பேர் மனு அளித்துள்ளனர்? எத்தனை பேர் கூடுதல் மனுக்கள் அளித்துள்ளனர்? என்ற அதிகாரபூர்வ தகவல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இன்று நடைபெற உள்ளது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலினைபோது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்காத மனுக்கள் நிராகரிக்கப்படும். எனவே அந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று முடிந்தவுடன், நிராகரிக்கப்பட்ட பெயர்களை தவிர்த்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் பெயர்கள் வரிசைப்படுத்தப்படும்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் தங்களுக்கு போட்டியிட விரும்பவில்லை என்று கருதினால், அவர்கள் தங்களது மனுவை 22-ந் தேதி மதியம் 3 மணிக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது.

இன்று  வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது

* எடப்பாடியில் முதல்- அமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனு ஏற்றுக்க்கொள்ளப்பட்டது.

* போடி நாயக்கனூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர்  மு.க ஸ்டாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் செங்கோட்டையனின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* சென்னை, திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் சீமான் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்புவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* அரவக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனுவை ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கப்ப்ட்டு உள்ளது.

* தொண்ட்டாமுத்தூரில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சொத்து விவரங்கள் சரியாக இல்லை என  திமுக வேட்பாலர் கார்த்திகேய சேனாபதி புகார் கூறி உள்ளார்.

* நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் பாலகிருஷ்ணனின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

* மயிலாப்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீப்ரியா வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* கோவை தெற்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* கோவில்பட்டி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி.ஜெயராமன் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

* நெல்லை தொகுதி சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


Next Story