தொகுதி கண்ணோட்டம்: வாணியம்பாடி


தொகுதி கண்ணோட்டம்: வாணியம்பாடி
x
தினத்தந்தி 21 March 2021 8:18 PM IST (Updated: 21 March 2021 8:18 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பாலாறு தொடங்கும் இடத்தில் வாணியம்பாடி தொகுதி உள்ளது.

தொழிற்சாலைகள்
தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியுடன் கூடிய காவலூர் விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டியப்பனூர் அணை, ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, ஜவ்வாதுமலையின் சந்தன மரங்கள் மற்றும் சுவையான பிரியாணிக்கும் வாணியம்பாடி தொகுதி பெயர் பெற்றது.வாணியம்பாடி தொகுதியில் நகர பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையும், பேரூராட்சி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளும் முக்கிய தொழில் பகுதியாக உள்ளன. கிராம பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். அரசு சார்பில் தொழிற்சாலை எதுவும் இல்லை.

இந்த தொகுதியில் வாணியம்பாடி நகரத்தில் 36 வார்டுகள், ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகள், உதயேந்திரம் பேரூராட்சியில் 15 வார்டுகள், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பீமகுளம், நாயக்கனூர், நரசிங்கபுரம், நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூர், வெள்ளக்குட்டை, கொத்தகோட்டை, பெரியகுரும்பதெரு, விஜிலா புரம், பெத்தவேப்பம்பட்டு, வள்ளிப்பட்டு, கோவிந்தாபுரம், வளையாம்பட்டு, நெக்னாமலை, தேவஸ்தானம், பள்ளிப்பட்டு, ஜாப்ராபாத் ஆகிய 17 ஊராட்சி கள், திருப்பத்தூர் ஒன்றியத்துக் குட்பட்ட பூங்குளம், மரிமாணி குப்பம், மிட்டூர் பெருமாபட்டு, பள்ளவள்ளி, குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு, ஆண்டியப்பனூர் ஆகிய 8 ஊராட்சிகள், நாட்டறம் பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட நாராயணபுரம், அலசந்தாபுரம், திம்மாம்பேட்டை, புல்லூர், ராமநாயக்கன்பேட்டை, ஆவராங்குப்பம், மல்லகுண்டா, சிக்கனாகுப்பம், அம்பலூர், கொடையாஞ்சி, தும்பேரி, வடக்குபட்டு, தெக்குபட்டு, எக்லாசபுரம், மல்லங்குப்பம், சங்கரபுரம், அழிஞ்சிகுப்பம் ஆகிய 17 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.

கோரை பாய் தயாரிப்பு
வாணியம்பாடி தொகுதி மக்களின் பிரதான தொழிலாக தோல் பதனிடும் தொழில், தோல் பொருட்கள் தயாரிப்பு, தென்னை, கரும்பு உள்ளிட்ட வேளாண்மை, கோரை பாய் தயாரிப்பு, பீடி சுற்றுதல், ஊதுபத்தி தயாரித்தல் உள்ளிட்டவை முக்கிய தொழிலாகும். வாணியம்பாடி தொகுதியில் இஸ்லாமியர்களும், வன்னியர்களும் ஏறத்தாழ சமநிலையிலும், பட்டியல் இனமக்கள், முதலியார், நாயுடு, யாதவர், ஆதிதிராவிடர், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர சமூகத்தினரும் உள்ளனர்.வாணியம்பாடி தொகுதியில் 256 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தன. கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது மொத்தம் 361 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.1957-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏ.ஏ.ரஷீத், 1962-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.வடிவேல், 1967-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜமன்னார் ஆகியோர் தேர்தல்களில் வெற்றி பெற்றனர்.

4 முறை வெற்றி பெற்றவர்
1971, 1977, 1996, 2001 ஆகிய 4 சட்டமன்ற தேர்தலில் அப்துல்லத்தீப் வெற்றி பெற்றுள்ளார். இதில் 1971 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். மேலும் 1977-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆதரவுடன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 1996-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் இந்திய தேசிய லீக் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் இந்திய தேசியலீக் சார்பில் போட்டியிட்டு அப்துல்லத்தீப் வெற்றி பெற்றார். இவர் 2001-ம் ஆண்டு சட்டசபையில் தற்காலிக சபாநாயகராகவும் பணியாற்றினார்.1980-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.குலசேகரபாண்டியன், 1984-ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எச்.அப்துல்மஜீத், 1989-ல் தி.மு.க.வை சேர்ந்த அப்துல்சமத், 1991-ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த பாலூர் இ.சம்பத் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இடைத்தேர்தல்
2002-ம் ஆண்டு அப்துல்லத்தீப் மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.வடிவேல் வெற்றி பெற்றார். 2006-ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அப்துல்பாசித், இந்திய தேசிய லீக் சார்பில் முகமது அலி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அப்துல்பாசித் வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.வை சேர்ந்த கோவி.சம்பத்குமார், இந்திய யூனியன் முஸ்லிக் லீக்கை சேர்ந்த அப்துல்பாசித் ஆகியோர் போட்டியிட்டதில் கோவி.சம்பத்குமார் வெற்றி பெற்றார்.கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நிலோபர்கபில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த சையத் பாரூக் ஆகியோர் போட்டியிட்டதில் நிலோபர் கபில் வெற்றி பெற்றார்.

அமைச்சர்கள்
தேர்தலில் வெற்றிப் பெற்ற நிலோபர்கபிலுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக உள்ளார். ஏற்கனவே வாணியம்பாடி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.வடிவேல் தொழில்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும் வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் வேலூர் தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். வாணியம்பாடியை அடுத்த புல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மா.சுப்பிரமணியம் சென்னை மாநகர மேயராகவும், சென்னையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன் வாணியம்பாடியில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் படித்தவர். இதுபோல் பல முக்கிய தலைவர்களை உருவாக்கிய தொகுதியாக வாணியம்பாடி தொகுதி இருந்து வருகிறது.

வாணியம்பாடி, ஆலங்காயம், உதயேந்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. வாணியம்பாடி நகரம் முழுவதும் தார், சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம், மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம், அரசு தோல்பயிற்சி நிலையம், மற்றும் ஐ.டி.ஐ. பயிற்சி கல்லூரி, வாணியம்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆகியும் சாலை வசதி இல்லாமல் இருந்த நெக்னாமலை ஊராட்சிக்கு மலைப்பகுதியில் 8 கிலோமீட்டர் தூரம் சாலை அமைத்தது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

சுரங்கப்பாதை
வாணியம்பாடி நகரின் முக்கிய பிரச்சினையான நியூடவுன் சுரங்கப்பாதை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தென்பெண்ணை-பாலாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். பாலாற்றின் குறுக்கே சிறிய மற்றும் பெரிய தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீர் மேம்படுத்தப்பட வேண்டும். வாணியம்பாடி தொகுதியில் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண்மை கல்லூரிகள் வேண்டும், நிதிகள் ஒதுக்கப்பட்டும் வாணியம்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றம், தொழிலாளர் நல மருத்துவமனை பணிகள் முடிக்கப்படவில்லை. வாணியம்பாடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட 
வேண்டும். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளதால் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிறப்பு அறுவை சிகிச்சை மையம் உருவாக்கப்பட வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா பகுதியில் தொழிற்பேட்டை (சிப்காட்) தொடங்கப்பட வேண்டும். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ் ரோட்டை ஒட்டியபடி 10 ஆண்டுகளுக்கு முன்பு கூடுதல் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த பஸ் நிலையம் திறக்கப்படவில்லை. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மூடப்பட்டுள்ள சந்தன எண்ணெய் தொழிற்சாலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், வாணியம்பாடி பைபாஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பஸ் நிலையத்தை முறையாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமப்புற மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கிராமப்பகுதிகளில் விரிவாக்கம் செய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

போட்டியிட உள்ள கட்சிகள்
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ஜி.செந்தில்குமார் போட்டியிடுகிறார். தி.மு.க.வை பொருத்தவரை கடந்த 1996-ம் ஆண்டு வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டது. அதனையடுத்து வந்த அனைத்து தேர்தலிலும் கூட்டணி கட்சிக்கு வாணியம்பாடி தொகுதியை ஒதுக்கி வந்தது. இந்த முறையும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வேட்பாளராக என்.முகமது நயீம் என்பவர் போட்டியிடுகிறார்.

அ.ம.மு.க. கூட்டணி கட்சியான ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது. அதன் வேட்பாளராக வக்கீல் அகமது போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளராக ஞானதாஸ் என்பவரும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தேவேந்திரன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

வெற்றியும், தோல்வியும்

வாணியம்பாடி சட்டசபை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு:-

1957 - காங்கிரஸ் வெற்றி :-

ஏ.ஏ.ரஷித் (காங்.) - 18,565

எம்.பி.வடிவேல் (சுயே.) -13,930

1962 - தி.மு.க. வெற்றி :-

எம்.பி.வடிவேல் (தி.மு.க.) - 27,275

பி.கரிய கவுண்டர் (காங்.) -20,068

1967 - காங்கிரஸ் வெற்றி :-

ராஜமன்னார் (காங்.) - 26,946

வடிவேல் (தி.மு.க.) -25,308

1971- சுயேச்சை வெற்றி :-

அப்துல் லத்தீப் (சுயே.) -27,899

ஆர்.சி.சாமண்ணகவுண்டர் (காங்.) - 19,082

1977 - சுயேச்சை வெற்றி :-

அப்துல்லத்தீப் (சுயே.) - 26,620

சம்பங்கி (தி.மு.க.) - 17,886

1980 -அ.தி.மு.க. வெற்றி:-

குலசேகரபாண்டியன் (அ.தி.மு.க.) - 38,049

அப்துல்லத்தீப் (சுயே.) - 34,375

1984 - காங்கிரஸ் வெற்றி:-

எச்.அப்துல்மஜீத் (காங்.) - 39,141

ஏ.பி.அப்துல்மஜித் (தி.மு.க.) 37,856

1989 - தி.மு.க. வெற்றி:-

அப்துல்சமத் (தி.மு.க.) -39,723

குலசேகரபாண்டியன் (அ.தி.மு.க.-ஜெ) - 22,614

1991 - காங்கிரஸ் வெற்றி :-

பாலூர் இ.சம்பத் (காங்.) -53,354

அப்துல்ஹமீது (தி.மு.க.) - 33,523

1996 -தி.மு.க வெற்றி :-

அப்துல்லத்தீப் (தி.மு.க) -74,223

குப்புசாமி (காங்.) - 26,970

2001 - தேசிய லீக் வெற்றி :-

அப்துல்லத்தீப் (அ.தி.மு.க.) -54,218

ஜெ.எம்.ஆரூண்ரஷீத் (தி.மு.க.) - 42,280

2002 -(இடைத்தேர்தல்) அ.தி.மு.க.வெற்றி :-

ஆர்.வடிவேல் (அ.தி.மு.க.) -63,599

நாகூர் அனிபா (தி.மு.க.) - 43,878

2006 - முஸ்லிம் லீக் வெற்றி:-

அப்துல்பாசித் (மு.லீக்.) -69,837

முகமதுஅலி (இந்திய தேசிய லீக்) - 45,653

2011 - அ.தி.மு.க. வெற்றி :-

கோவி.சம்பத்குமார் (அ.தி.மு.க.) - 80,563

அப்துல்பாசித் (மு.லீக்) - 62,338

2016 - அ.தி.மு.க. வெற்றி :-

நிலோபர்கபில் (அ.தி.மு.க.) - 69,588

சையத் பாரூக் (மு.லீக்) - 55,062

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் -2,47,924

ஆண்கள் -1,22,042

பெண்கள் -1,25,845

மூன்றாம் பாலினம் -37


Next Story