அ.தி.மு.க. எம்.பி. முகமது ஜான் மறைவு; தலைவர்கள் இரங்கல்


அ.தி.மு.க. எம்.பி. முகமது ஜான் மறைவு; தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 23 March 2021 2:28 PM GMT (Updated: 23 March 2021 2:28 PM GMT)

அ.தி.மு.க. எம்.பி. முகமது ஜான் திடீர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

சென்னை

அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி முகமது ஜான். கடந்த 2019-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் குமாரை ஆதரித்து, முகமது ஜான் கடந்த ஒரு வார காலமாக, இரவு, பகலாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இன்று  காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றார். பின்னர் பிரசாரத்திற்காக அவர் வீட்டிலிருந்து காரில் புறப்பட்ட போது நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, உடனடியாக அவரை காரில் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முகமது ஜானை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி முகமது ஜான் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

முகமது ஜானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைத் தர வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மீதும், அ.தி.மு.க. தலைமை மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டவர் முகமது ஜான். முகமது ஜான் மறைவு செய்திக் கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்" என்று தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் அமைச்சராக, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து சீர்மிகு பணியாற்றியவர். மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த அவரது மறைவு தமிழக மக்களுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

பா.ம.க. நிறுவனர் டாகடர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அ.தி.மு.க.வின் சிறுபான்மை சமுதாயத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவரான முகமது ஜான் மிகவும் எளிமையானவர். 

மக்களிடம் நெருங்கிப் பழகக் கூடியவர். அவரது மறைவு அ.தி.மு.க.வுக்கு இழப்பாகும். மறைந்த முகமது ஜான் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அ.தி.மு.க.வினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

Next Story