தொகுதி கண்ணோட்டம்: திருவிடைமருதூர் (தனி)
தஞ்சை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு 10 தொகுதிகள் இருந்தன. இதில் 2011-ம் ஆண்டு தேர்தலில் திருவோணம், வலங்கைமான் ஆகிய 2 தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக வேறு தொகுதிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில்
திருவிடைமருதூர் தொகுதியில் புகழ்பெற்ற மகாலிங்கேஸ்வரர் கோவில், கஞ்சனூர், சூரியனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்வார்கள் என்பது சிறப்பு அம்சமாகும்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த தொகுதி, சீரமைப்புக்கு பின்னர் தமிழக சட்டசபை தொகுதிகளின் வரிசையில் 170-வது இடத்தை பிடித்துள்ளது. திருவிடைமருதூர் வட்டம், கும்பகோணம் வட்டத்தின் சில பகுதிகளை இந்த தொகுதி உள்ளடக்கியது.திருவிடைமருதூர் ஒன்றியத்தின் 46 ஊராட்சிகள், திருப்பனந்தாள் ஒன்றியத்தின் 44 ஊராட்சிகள், கும்பகோணம் ஒன்றியத்தின் 5 ஊராட்சிகள், திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை, வேப்பத்தூர், திருப்பனந்தாள் ஆகிய 5 பேரூராட்சிகளை கொண்டுள்ளது. 1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு முன்பு வரை பொதுத்தொகுதியாக இருந்தது. 2011-ம் ஆண்டு தேர்தலில் தான் தனித்தொகுதியாக முதன்முதலில் உருவெடுத்தது.
1977-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதி இதுவரை 10 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்று உள்ளது.
திருவிடைமருதூர் தொகுதியின் முக்கிய தொழில் விவசாயம், கைத்தறி நெசவு, குத்துவிளக்கு தயாரித்தல் போன்றவையாகும். இந்த பகுதியில் முக்கிய ஆறுகளான காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் மூலம் 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் கரும்பு மற்றும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த தொகுதியில் உள்ள ஆடுதுறையில் பழமைவாய்ந்த நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
தமிழக அரசு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் இந்த தொகுதிக்குட்பட்ட இஞ்சிகொல்லை, தேப்பெருமாநல்லூர், திருவிசைநல்லூர், சூரியனார்கோவில் ஆகிய பகுதிகளில் சாலை பணிகள், குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருப்பனந்தாள் பஸ் நிலையம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. தேப்பெருமாநல்லூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு உள்ளிட்ட அனைத்து ஊராட்சி, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் சமுதாயக்கூடம் அமைத்து தரப்பட்டுள்ளது.தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி பள்ளி, அரசுக்கல்லூரிகள் இல்லாததால் கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் போன்ற பகுதிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்.ஆடுதுறை பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான நெல் ஆராய்ச்சி நிலையத்தை வேளாண் கல்லூரியாக மாற்ற வேண்டும் என பல முறை சட்டசபையில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே ஆடுதுறையில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்.திருவிடைமருதூர் தாலுகா மருத்துவமனை போதிய வசதி இல்லாமல் உள்ளது. இதனால், இந்த பகுதி மக்கள் கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்படுகின்றனர். எனவே இங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும்.
திருவிடைமருதூர் பகுதியில் நெசவாளர்கள் அதிகம் உள்ளதால் அவர்களுக்கு அபிவிருத்தி கட்டமைப்பு வசதி செய்து தரவேண்டும். ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். இங்கு உள்ள தீயணைப்பு நிலையம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதற்காக புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆயிரக்கணக்கான மாடுகள் வளர்த்து வருவதால் பால்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும், இந்த பகுதியில் ஆவின் பால்பண்ணை அமைக்கப்பட வேண்டும்.கொள்ளிடம் அணைக்கரை பகுதியில் உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் மீன் விற்பனைக்கு சந்தைக்கூடம் அமைக்க வேண்டும். விற்கப்படாமல் உள்ள மீன்களை பாதுகாக்க குளிர்சாதனப்பெட்டியுடன் கூடிய ஐஸ் பதனிடப்பட்ட அறை கட்டித்தரவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
நாச்சியார்கோவில் பகுதியில் கைத்தறி நெசவு தொழில் முக்கியமானதாக உள்ளது. இவர்களுக்கு கூலிஉயர்வு இல்லாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், எனவே கூலி உயர்வு வழங்குவதோடு, தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது நெசவாளர்களின் எதிர்பார்ப்பாகும். நாச்சியார்கோவிலில் தயாரிக்கப்படும் குத்துவிளக்கு உலக பிரசித்தி பெற்றதாகும். எனவே நாச்சியார்கோவிலில் குத்துவிளக்கு பயிற்சி பட்டறை அமைக்க வேண்டும். குத்துவிளக்கு தொழிலுக்கு ஏற்ற மூலப்பொருள் விற்பனையகம் மற்றும் விற்பனை செய்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து தர
வேண்டும் என்பதும் இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.இந்த பகுதியில் வன்னியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இதுதவிர கள்ளர்கள், செட்டியார் என அனைத்து சமுதாயத்தினரும் வசித்து வருகிறார்கள்.
2016-ம் ஆண்டு திருவிடைமருதூர் தொகுதியில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 25 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் புதிய வாக்காளர்கள், இடம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்கள் என 25 ஆயிரத்து 49 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே இவர்களது வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் 2,59,074
ஆண்கள் 1,28,444
பெண்கள் 1,30,615
மூன்றாவது பாலினம் 15
Related Tags :
Next Story