அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி உறுதி டாக்டர் காயத்ரிதேவி பேட்டி


அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி உறுதி டாக்டர் காயத்ரிதேவி பேட்டி
x
தினத்தந்தி 25 March 2021 12:17 AM GMT (Updated: 25 March 2021 12:17 AM GMT)

தி.மு.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் பெண்களை கேவலமாக சித்தரித்து பேசுவதால், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் கே.காயத்ரிதேவி கூறினார்.

சென்னை, 

இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள பா.ஜ.க. தலைமை தேர்தல் அலுவலகத்தில் மாநில பெண்கள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டாக்டர் கே.காயத்ரிதேவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முன்னேற அனைத்து மக்களும் முன்னேற வேண்டும், குறிப்பாக பெண்களும் முன்னேற வேண்டும். பெண்கள் பொருளாதாரத்தில் சுதந்திரம் அடைவதுடன், சமுதாயத்திலும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி பெண்கள் முன்னேத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

இரட்டை குழல் துப்பாக்கி

அதேபோல் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வின் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் பெண்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். தொட்டில் குழந்தை திட்டம், இதனால் பெண் சிசு கொலை குறைந்தது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா குழந்தை கிட் திட்டம் மூலம் பிரவசவமான பெண்ணுக்கு தேவையானவற்றை கொடுத்துள்ளார்கள். பெண்களின் ஆரோக்கியம் மேம்படுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் உட்பட பல திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தி காட்டினார். இவை அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெண்கள் மேம்பாட்டில் மத்திய மாநில அரசுகள் இரட்டை குழல் துப்பாக்கி போல் சிறப்பாக செயல்படுகிறது.

ஆனால் தி.மு.க. வினரும், அதனுடைய கூட்டணி கட்சியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன், கி.வீரமணி போன்றோர்கள் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஒட்டுமொத்தமாக இந்து மத பெண்களை கேவலமாக விமர்ச்சிக்கிறார்கள். எனவே இந்து மத பெண்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்பதால் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நமீதா பிரசாரம்

பின்னர் நடிகை நமீதா கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் 10 நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறேன். இதில் 2 முக்கிய நகரங்கள் முழுமையாக பிரசாரம் செய்வேன். குறிப்பாக நடிகை குஷ்பு எனக்கு 13 ஆண்டுகளாக குடும்ப நண்பர் மற்றும் ஆசான். அவருடைய வெற்றிக்காக பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story