தபால் வாக்கு அளிக்க இருப்போர் வாய்ப்பை தவறவிட்டால் சட்டசபை தேர்தலில் ஓட்டு போட முடியாது தேர்தல் அலுவலர் அறிவிப்பு
தபால் வாக்கு அளிக்க இருப்போர் வாய்ப்பை தவறவிட்டால், சட்டசபை தேர்தலில் ஓட்டு போட முடியாது என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
சென்னை,
சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் அளிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் தலைமையில் நடந்தது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிப்பதற்கான பணிகள் தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வீடு வீடாக வாக்குப்பதிவு அலுவலர்கள் தபால் வாக்கு பெறும் பணியை தொடங்குவார்கள்.
இந்த பணியின்போது கொரோனாவை கருத்தில் கொண்டு கூட்டம் சேராமல் இருப்பதற்கும் போதுமான வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தபால் ஓட்டு அளிக்கும்போது, ஒரு வேட்பாளர் சார்பில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அனுமதி கிடையாது
தபால் ஓட்டு பெறப்படும் வீட்டில், வாக்குப்பதிவு மையங்கள் போல உருவாக்கப்படும். ஒருவரது வீட்டில் தபால் வாக்கு பெறுபவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஆகும். வாக்குச்சாவடி மையத்தில் இருக்கும் 45 வயதுக்கு மேலான அனைத்து ஏஜெண்டுகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணைத்தியத்தின் அறிவுறுத்தல்படி, வாக்காளர்களுக்கு, வாக்குப்பதிவு அலுவலர்கள் வருகை தரும் நேரத்தை தெரிவிப்பார்கள். அப்போது அவர்கள் வீட்டில் இல்லை என்றால், அடுத்த முறை மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும். 2-வது முறையும் அவர்கள் வீட்டில் இல்லை என்றால், வாக்காளர் தபால் ஓட்டு போட அனுமதி கிடையாது. அவர்கள் வாக்குப்பதிவு மையத்துக்கும் சென்று ஓட்டு போட முடியாது.
12 மணி நேரம்
7,300 தபால் வாக்காளர்களில் யாருக்கும் கொரோனா இல்லை. ஒருவேளை ஓட்டு பதிவு அன்று, வாக்காளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால், முழு உடல் கவச உடை கொடுக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையுடன் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதனால் தான், ஓட்டுபதிவு நேரம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி இலவச தொலைபேசி எண்ணிற்கு இதுவரை 91 புகார்கள் வந்துள்ளது. அதில் 90 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ‘சிவிஜில்’ செயலில் 148 புகார்கள் வந்துள்ளது. அதில் 124 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரணி, தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட அனுமதி கேட்பதில் 2,407 மனுக்கள் வந்துள்ளது. அதில், 1,430 மனுக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story