தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பணம் அதிகமாக கைப்பற்றப்படும் இடங்களில் தேர்தல் ரத்தாகுமா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்


தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பணம் அதிகமாக கைப்பற்றப்படும் இடங்களில் தேர்தல் ரத்தாகுமா? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 25 March 2021 10:08 PM GMT (Updated: 2021-03-26T03:38:12+05:30)

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பணம் அதிகமாக கைப்பற்றப்படும் இடங்களில் தேர்தல் ரத்தாகுமா? என்பதற்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, 

சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய வாக்காளர் வீடுகளுக்கு இம்மாத இறுதிக்குள் விரைவு தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பப்பட்டுவிடும். 80 வயதுக்கு மேலானவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இருந்து தபால் ஓட்டுக்கான 12-டி விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது தபால் ஓட்டுகள் அளிக்க போகிறோம். அதற்கு முன்பு சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அந்தந்த வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விண்ணப்பதாரரின் பட்டியலை அளிப்பார்கள்.

பின்னர் அந்த வாக்காளர்களின் வீட்டுக்கு செல்வதற்கான நாள், நேரத்தை அதிகாரிகள் குறிப்பார்கள். ஒரு நாளுக்கு எத்தனை வாக்காளர் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்று கணக்கிட்டு செல்வார்கள். முன்னதாக, அதுபற்றி வாக்காளர்களின் செல்போன் எண்ணுக்கு ‘எஸ்.எம்.எஸ்.’ மூலம் தகவல் அளிக்கப்படும். இல்லாவிட்டால், அவர்களின் வீடுகளுக்கு சென்று அதுபற்றிய தகவலை வாக்குச்சாவடி அலுவலர் கூறுவார்.

அவர்கள் கூறிய நாள், நேரத்திற்கு அங்கு சென்று தபால் வாக்கை அளிப்பார்கள். மறைவாக வாக்களிக்கும் வகையில் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, தபால் ஓட்டு போடுவதற்கான பெட்டியை அதன் அருகே வைப்பார்கள். வாக்காளர் ஓட்டு போட்டதும் அந்த பெட்டியை எடுத்துச் செல்வார்கள். தபால் ஓட்டுகளை பெறும் நடைமுறையை வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாளுக்குள் (ஏப்ரல் 5-ந்தேதிக்குள்) முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் சீக்கிரமாக இந்தப்பணியை முடிக்கவும் வழிவகை செய்துகொள்ளலாம்.

மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள்

தபால் ஓட்டில் வாக்குச்சாவடி அலுவலர் கையெழுத்திடுவார். தபால் ஓட்டு போடும் நடைமுறை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படும். போலீசார், வேட்பாளரின் முகவர்கள், தேர்தல் நுண் பார்வையாளர்கள் அங்கிருப்பார்கள். தபால் ஓட்டுப்பதிவு, இணையதளத்தில் ‘வெப் காஸ்டிங்’ நேரலை காட்சி வசதி செய்யப்படவில்லை. ஏனென்றால் எல்லா இடங்களிலும் ‘‘நெட்” வசதி கிடைப்பதில்லை. தொழில்நுட்பம் வளர வளர அதுபோன்ற வசதியை தேர்தல் ஆணையம் மேம்படுத்தும்.

மத்திய அரசுப் பணியில் உள்ளவர்கள் மற்றும் வங்கிகள், காப்பீட்டு கழக நிறுவனங்களில் இருப்பவர்கள் தேர்தல் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 300 மிகவும் பதற்றத்திற்குரிய வாக்குச்சாவடிகளும், 10 ஆயிரத்து 528 பதற்றத்திற்குரிய வாக்குச்சாவடிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தேர்தல் அலுவலர்கள், பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். எனவே இந்த வகை வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வாக்குப்பதிவு நாளன்று நுண் பார்வையாளர்கள் அந்த வாக்குச்சாவடிகளில் இருப்பார்கள்.

சாதி பிரச்சினை, சாதகமாக ஓட்டு போட மிரட்டுவது, அச்சத்தை உருவாக்குவது போன்ற சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருந்தால் அவை பதற்றத்திற்குரிய வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்படும்.

வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, ஒரு வேட்பாளருக்கு மட்டும் இயல்பை தாண்டி அதிக ஓட்டுகள் விழுவது, இயல்பைவிட அதிக ஓட்டுகள் பதிவாவது போன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அது மிகவும் பதற்றத்திற்குரிய வாக்குச்சாவடியாக கருதப்படும்.

மகளிர் வாக்குச்சாவடி

மொத்தமுள்ள வாக்குச்சாவடிகளில் 50 சதவீதமான 44 ஆயிரத்து 758-க்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நாளன்று வெப் காஸ்டிங்’ நேரலை காட்சி வசதிகள் செய்யப்படும். இது முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படும். வாக்குப்பதிவு நடப்பதை நேரலையாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பார்க்கலாம்.

மிகவும் பதற்றத்திற்குரிய வாக்குச்சாவடிகள், பதற்றத்திற்குரிய வாக்குச்சாவடிகளில் கண்டிப்பாக ‘வெப் காஸ்டிங்’ இருக்கும். ‘வெப் காஸ்டிங்’ வசதிக்காக இணைய வசதிகள் நன்றாக இருக்கும் பகுதிகளை தற்போது அதிகாரிகள் அடையாளம் கண்டு வருகின்றனர். பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படும். பெண்கள் மட்டுமே அங்கு வாக்களிப்பார்கள்.

தடுப்பூசி முன்னுரிமை

வாக்குப்பதிவு நேரம் பிற்பகுதியில் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமானதல்ல. கடைசி ஒரு மணி நேரத்தில் மற்ற வாக்காளர்களும் வந்து வாக்களிக்கலாம். இரவு 7 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்து டோக்கன் வாங்கிவிட்டால், பின்னர் அங்குள்ள நிலைமைக்கு ஏற்ப எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருந்து ஓட்டு போடலாம்.

கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் வாக்கு மறுக்கப்படக்கூடாது என்பதுதான் இந்திய தேர்தல் ஆணையத்தின் எண்ணம். எனவே அப்படிப்பட்டவர்கள் முழு பாதுகாப்போடு வாக்களிக்க வந்தாலும் வாய்ப்பு அளிக்கப்படும். அப்போது அங்குள்ள வாக்குச்சாவடி அலுவலர்களும் முழு கொரோனா தடுப்பு பாதுகாப்போடு இருப்பார்கள். முழு பாதுகாப்பு உடையில்லாமல் வந்தால்கூட, அவர்களுக்கு அங்கு அந்த உடை வழங்கப்படும்.

தேர்தல் பணியாளர்களுக்கு வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு கொரோனா பரிசோதனை இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் நடந்தது போல....

வருமான வரித்துறையினரின் சோதனை சில இடங்களில் நடக்கிறது. அவர்கள் பணிக்கென்று தனி நடைமுறை உள்ளது. அவர்களுக்கு நுண்ணறிவுப் பிரிவு உள்ளது. எனவே அந்தத்துறையினர் சார்பிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படலாம். அப்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அது தேர்தல் தொடர்புடையது என்றால் எங்களுக்கு அறிக்கை அளிப்பார்கள். தேர்தல் தொடர்பு இல்லை என்றால் அவர்களே அதை கவனிப்பார்கள்.

எந்தப் பகுதியில் இருந்தும் எப்படிப்பட்ட புகார்கள் யார் மீது வந்தாலும் அதுபற்றி தேர்தல் பார்வையாளர்களிடம் இருந்து கருத்துக்களை இந்திய தேர்தல் ஆணையம் பெறும். அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை ஆணையம் எடுக்கும். கோவையிலும் அதுபோல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் கூட்ட நெரிசல் இருப்பது பற்றிய தகவல்களை வெளியிடும் செயலி வசதி இப்போதும் உள்ளது. ஆனால் அந்த தகவலை வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்களே தங்களின் பணியுடன் இதையும் பராமரிக்க வேண்டும் என்பதால், அதை முழுமையாக எதிர்பார்க்க தேவையில்லை.

பணம் அதிகம் பிடிபட்டால்...

பணம் அதிகமாக பிடிக்கப்படும் இடங்களில் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? என்றால், அது இந்திய தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு உட்பட்டது. அங்கு அரசியல் ரீதியாக என்ன நடக்கிறது? பணப்பட்டுவாடா நடக்கிறதா? அது அரசியல் தொடர்புடையதா? என்பதுபோன்ற அங்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஆணையம் அதுபற்றி முடிவெடுக்கும்.

தேர்தல் செலவின பிரச்சினை உள்ள தொகுதிகள் 105 உள்ளன. அதை மனதில் வைத்துத்தான் 118 செலவினப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளது. அவர்கள் இந்த 105 தொகுதிகளை மட்டுமல்லாமல் 234 தொகுதிகளையுமே கண்காணிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Next Story