'தி.மு.க. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி அல்ல, எதிரி கட்சி' ஜி.கே.வாசன் பேச்சு


தி.மு.க. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி அல்ல, எதிரி கட்சி ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 25 March 2021 10:11 PM GMT (Updated: 25 March 2021 10:11 PM GMT)

தி.மு.க. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக அல்ல, எதிரி கட்சியாக செயல்படுவதாக உத்திரமேரூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

உத்திரமேரூர், 

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சோமசுந்தரத்தை ஆதரித்து தமிழ் மாநில காஙகிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டிலுள்ள 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறேன். செல்லும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பெருவாரியான ஆதரவை தருவதை கண்கூடாக பார்க்கிறேன். இந்த கூட்டணி வெற்றி கூட்டணி.

பொய்யான வாக்குறுதி

தி.மு.க. பொய் வாக்குறுதிகளை கூறி செய்ய முடியாததை எல்லாம் சொல்லி மக்களிடம் கூனி குறுகி நிற்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றார்கள். ஆனால் இப்போது அப்படி அவர்களால் செய்ய முடியாது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமானியர்கள். அவர்கள் மக்களை சந்தித்து மக்களுடைய கஷ்டங்களை புரிந்து அதற்கேற்றபடி தேர்தல் அறிக்கையை தயாரித்து, தமிழக மக்கள் பாராட்ட கூடிய அளவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். ஏழை பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500, பெண்கள் சமையல் செய்ய சிரமப்பட கூடாது என்ற எண்ணத்தில் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசம், கொரோனா காலத்தில் ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் வங்கிகளில் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்தார்கள் .அதையெல்லாம் நீக்குவதற்காக இன்று 6 பவுன் நகை அளவு கடன் வாங்கியதை மீட்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எதிரி கட்சியாக...

மேலும் மகளிர் சுயஉதவி குழுக்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பெண்கள் மேம்பாட்டுக்காக தமிழகத்தில் அதிக திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் அதை புரிந்து கொண்ட அரசு பெண்களுக்காக அதிக திட்டங்களை தீட்டியுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள கல்வி கடன் ரத்து என்பதை ஒவ்வொரு பெற்றோரும் மறக்கக்கூடாது.

அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் போன்றவற்றால் பொதுமக்கள் மிகுந்த பயன் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை எதிரி கட்சியாகத்தான் செயல்படுகிறது. கொரோனா காலத்தில் மக்கள் துயர் துடைக்க அரசு ரூ.1000 கொடுப்பதாக சொன்னபோது அதை தடுக்க நினைத்தது தி.மு.க. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக மின்சாரம் இல்லாமல் எந்த அளவுக்கு பொதுமக்கள் தவித்தனர் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கொரோனா தொற்று இந்தியா முழுக்க பரவியபோது எந்த மாநிலத்திலும் செய்யாத அளவுக்கு அதிக அளவில் பரிசோதனை செய்து அதை கட்டுக்குள் கொண்டு வந்த மாநிலம் தமிழ்நாடு.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story