5 மாநில சட்டமன்ற தேர்தல்: நிதி பத்திரங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதற்கான தேர்தல் பத்திரங்கள் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
புதுடெல்லி
மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதை தடைச் எய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.
அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடைகள் பெறுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் நிதி பத்திரங்கள் (‘எலெக்டோரல் பாண்ட்ஸ்’) வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது.
இந்த பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் தனி நபர் அல்லது இந்தியாவில் நிறுவப்பட்ட அமைப்புகளால் வாங்க முடியும். ஒவ்வொரு காலாண்டிலும் முதல் பத்து நாட்கள் இவை விற்பனைக்கு கிடைக்கும்.
தனி நபர்கள் அல்லது இந்தியாவில் உள்ள அமைப்பினர் இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். அந்த பத்திரங்களில் வாங்கியவரின் பெயர் இருக்காது. வாங்கியவர் குறித்த தகவல்கள் வங்கியிடம் இருந்தாலும், அந்த நன்கொடையை வழங்கியவர் யார் என்று, அந்த நன்கொடையை பெற்ற அரசியல் கட்சிக்கு தெரியாது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறும் நிதிக்கு அரசியல் கட்சிகள் வருமான வரி விலக்கு பெற முடியும்.
இந்த நிலையில், தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் திட்டத்துக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற தொண்டு நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
அதில் தேர்தல் நேரத்தில் போலி நிறுவனங்களின் பெயரில் சட்டவிரோதமான முறையில் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது, தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகரிக்கும் என குற்றம்சாட்டப் பட்டிருந்தது.
தேர்தல் பத்திரங்களை தடை செய்தால், பழைய முறையில் கணக்கில் வராத ரொக்கமாக நிதி அளிக்கும் முறை திரும்பிவிடும் என தேர்தல் ஆணைய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசியலில் கறுப்பு பண புழக்கத்தின் செல்வாக்கை தடுக்கவே தேர்தல் பத்திரங்கள் முறை கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, தேர்தல் பத்திரங்களுக்கு தடை விதிப்பதற்கு இப்போது எந்த காரணமும் இல்லை என தீர்ப்பளித்து உள்ளது.
Related Tags :
Next Story