தி.மு.க.வுக்கு எதிராக பெண் பேசிய வீடியோ: சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி வழக்குப்பதிய வேண்டும் டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் உத்தரவு


தி.மு.க.வுக்கு எதிராக பெண் பேசிய வீடியோ: சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி வழக்குப்பதிய வேண்டும் டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 26 March 2021 9:07 PM GMT (Updated: 26 March 2021 9:07 PM GMT)

தி.மு.க.வுக்கு எதிராக பெண் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அந்தப் பெண் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தி.மு.க. கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதோடு அவர் அளித்துள்ள சர்ச்சைக்குரிய வீடியோவில் ஒரு பெண் பேசுகிறார்.

அதில், பட்டியல் இனத்து மாப்பிள்ளையை மற்ற சில சாதியைச் சேர்ந்த பெண் திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் பணமும், 8 கிராம் தங்கமும் பரிசாக அளிக்கப்படும் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கை மூலம் கூறியிருப்பது அபாயகரமானது என்று அந்தப் பெண் கூறுகிறார்.

நடவடிக்கைக்கு ஏற்பாடு

இந்த வாக்குறுதி, சமுதாயத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால் தி.மு.க.வுக்கு அந்த சாதியினர் வாக்களிக்கக் கூடாது என்றும் கூறுகிறார். எனவே அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் தடை செய்து நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அந்தப் பெண் தனது அடையாளத்தைப் பதிவு செய்யவில்லை. எப்படியென்றாலும், வெறுப்புள்ள, சாதித் துவேஷத்தை தூண்டும் அந்தப் பேச்சை உடனடியாக நீக்குவதற்கும், அப்படி பேசியதற்காக அந்தப் பெண் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டி.ஜி.பி.க்கு கடிதம்

அதைத் தொடர்ந்து தமிழக டி.ஜி.பி.க்கு சத்யபிரத சாகு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவில், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி வீடியோ மூலம் ஒரு பெண் தவறான தகவல்களை அளிப்பது தமிழகம் முழுவதும் இணையதளங்களில் பரவி வருகிறது என்றும், அதை உடனே தடை செய்வதோடு, அந்தப் பெண் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அப்பெண்ணின் வெறுப்புமிக்க பேச்சு, வாட்ஸ்அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் இருந்து நீக்கப்பட வேண்டும்.

அந்தப் பெண்ணைக் கண்டறிந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் தகுந்த பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story