வாக்காளர்கள் செல்போன் எண்களில் பா.ஜ.க. பிரசாரம்: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது? ஐகோர்ட்டு கேள்வி


வாக்காளர்கள் செல்போன் எண்களில் பா.ஜ.க. பிரசாரம்: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 27 March 2021 4:53 AM IST (Updated: 27 March 2021 4:53 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்கள் செல்போன் நம்பர் பா.ஜ.க.வினருக்கு எப்படி கிடைத்தது? என்பது குறித்த விசாரணை முடியும் வரை புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை ஏன் தள்ளிவைக்கக்கூடாது? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் பிரசாரம் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வினர், புதுச்சேரியில் தொகுதி வாரியாக ‘வாட்ஸ் ஆப் குரூப்களை' தொடங்கி, தேர்தல் பிரசாரம் செய்கின்றனர். இதற்காக ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் நம்பரை சட்டவிரோதமாக பெற்றுள்ளனர். இந்த பிரசாரத்துக்கு தடை விதிப்பதுடன், பா.ஜ.க.வினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த 24-ந்தேதி விசாரித்த ஐகோர்ட்டு, இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. வாக்காளர்களின் செல்போன் எண் எங்கிருந்து அரசியல் கட்சிக்கு கிடைத்தது? என்று கேள்வி எழுப்பி, இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

பா.ஜ.க.வுக்கு நோட்டீஸ்

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, ‘‘மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்களர்களுக்கு மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் பிரசாரம் செய்ய பா.ஜ.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கவில்லை. அதனால், இதுகுறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? என்று பா.ஜ.க.விற்கு கடந்த 7-ந்தேதி விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசுக்கு இதுவரை பதில் வரவில்லை. சைபர் கிரைம் போலீசார் விசாரித்து அளிக்கும் அறிக்கையின்படி, சட்டத்தின்படி தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார். முழுமையான விசாரணை நடத்தி முடிக்காமல் பா.ஜ.க., மீது நடவடிக்கை எடுக்க முடியாது" என்றும் கூறினார்.

போலீஸ் துன்புறுத்தல்

அப்போது, ஆதார் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் சந்திரசேகர், ‘‘இந்த புகார் மனு நகலை ஆதார் ஆணையத்துக்கு மனுதாரர் ஆனந்த் இதுவரை அனுப்ப வில்லை’’ என்றார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.என்.சுமதி, ‘‘சைபர் கிரைம் போலீசார் விசாரணையின் என்ற பெயரில் மனுதாரரின் பாட்டி, தங்கையை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வர வேண்டும் என்று துன்புறுத்துகின்றனர். இந்த வழக்கு தொடர்ந்த பின்னரும், பா.ஜ.க.வினர் தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த வகையான பிரசாரத்தை அவர்கள் நிறுத்தவில்லை. எனவே, இவ்வாறு பிரசாரம் செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

தேர்தல் தள்ளிவைப்பு?

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘‘பா.ஜ.க.வினர் மீதான இந்த புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது?’’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் பா.ஜ.க.வினருக்கு எப்படி கிடைத்தது? என்பது குறித்து ஆதார் ஆணையம் விசாரிக்க வேண்டும். இந்த முறைகேடு தொடர்பாக ஆதார் ஆணையம், தேர்தல் ஆணையம் விசாரித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். விசாரணையை விரைவாக முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை வருகிற 31-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story