தி.மு.க. எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல ஸ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல ஸ்ரீரங்கம் தேர்தல் பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 27 March 2021 12:09 AM GMT (Updated: 27 March 2021 12:09 AM GMT)

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், தி.மு.க. எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல என்றும் ஸ்ரீரங்கத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சி, 

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஸ்ரீரங்கத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

‘‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’’ என்ற கொள்கையில் உறுதியாக உள்ளவர்கள் நாங்கள். அந்த கொள்கையின் அடிப்படையில், ‘‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’’ என்ற குறிக்கோளைக் கொண்டு அரசிலும், அரசுக்கு வெளியில் இருந்தாலும் இயங்குபவர்கள் நாங்கள்.

எனவே, எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல தி.மு.க. என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். அதனால்தான் நம்முடைய தேர்தல் அறிக்கையிலேயே சமுதாய நல்லிணக்கத்தை பேணி பாதுகாத்து பெரும்பான்மை - சிறுபான்மை என்ற பாகுபாடின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் மாண்புகளையும் பாதுகாத்திடுவதே தி.மு.க.வின் கடமை என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்காட்டி இருக்கிறோம்.

எதுவும் செய்யவில்லை

அதன்படியேதான், நாம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகும் கடைபிடிப்போம் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசாக இருந்தாலும், மாநிலத்தில் இருக்கும் அ.தி.மு.க. அரசாக இருந்தாலும் தேர்தல் பிரசாரத்தில், நம்மை விமர்சித்து பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்கள் ஆட்சிக்காலத்தில் என்ன செய்திருக்கிறோம், என்ன திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம், எதை மக்களுக்காக கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை பற்றி சொல்லும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை. காரணம், எதுவும் செய்யவில்லை.

இப்போது அந்த இரண்டு பேரும் ஜோடி போட்டுக்கொண்டு இந்த தேர்தலில் வாக்கு கேட்டு வருகிறார்கள். அவர்களை எல்லாம் வரும் 6-ந் தேதி இந்த நாட்டை விட்டு விரட்டும் வகையில் நீங்கள் உதயசூரியனுக்கு ஓட்டு போட்டு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

மக்களை பற்றி கவலை இல்லை

அ.தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்? இந்த கேள்வியைத்தான் நான் திரும்பத் திரும்ப அவர்களைப் பார்த்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஜெயலலிதா இறந்ததில் இருந்து கட்சியையும் - ஆட்சியையும் காப்பாற்றுவதில்தான் அவர்களுடைய கவனம் இருக்கிறதே தவிர, இந்த ஆட்சியை அதற்காகத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களே தவிர மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்தார். அவரிடம் இருந்து சசிகலா அந்த பதவியை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்த நாடகத்தை நடத்தினார்.

நாடகம்

இதன்பிறகு சசிகலா சிறைக்கு சென்றார். இதனால் தனக்கு அடிமையாக யார் இருப்பார்கள் என்று தேர்வு செய்து பழனிசாமியை முதல்-அமைச்சராக உட்கார வைத்தார். முதல்-அமைச்சர் பதவியை எப்படியாவது பறிக்க வேண்டும் என்று திட்டமிட்டு டி.டி.வி.தினகரன் களத்தில் இறங்கினார்.

அதற்கு பிறகு மோடியே தலையிட்டார். தமிழக கவர்னரை பயன்படுத்தி ஒரு கட்டப்பஞ்சாயத்தை நடத்துவதுபோல பன்னீர்செல்வம் - பழனிசாமி. இருவரையும் சமாதானம் செய்து அவர்களை இணைக்கும் நாடகத்தை நடத்தினார்கள்.

அதன்பிறகு இருவரும் பதவியைப் பங்கு போட்டுக் கொண்டார்கள். கட்சியிலும் - ஆட்சியிலும் வேறு வேறு மாதிரி பங்கு போட்டுக் கொண்டார்கள். அப்போது இருந்தே பழனிசாமியின் முதல்-அமைச்சர் பதவிக்கு பன்னீர்செல்வம் ஆசைப்பட..., இவருடைய ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பழனிசாமி முயற்சிக்க... இவ்வாறுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

உரிமைகளை பறிகொடுத்தனர்

சமீபத்தில் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார். சசிகலாவை சமாதானம் செய்ய பா.ஜ.க. எவ்வளவோ முயற்சி செய்தது.

ஆனால், அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்கிறோம் என்று ஒரு நாடகத்தை நடத்தினார்கள். இதுவரைக்கும் அது கண்டு பிடிக்கப்படவில்லை. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரையில் ஒரு செய்தியும் வரவில்லை.

ஜெயலலிதா கொடுத்துவிட்டுச் சென்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு ஏதாவது செய்து இருக்கிறார்களா? என்றால் இல்லை. தங்களது அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள மத்தியில் இருக்கும் பா.ஜ.க.விடம் அடிமையாக இருந்து, நம்முடைய உரிமைகளை பறிகொடுத்து இருக்கிறார்களே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

குளித்தலையில் மு.க.ஸ்டாலின், சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

Next Story